தர்மபுரியில் தமிழ் வளர்ச்சி துறை மண்டல கூட்டம்
தர்மபுரி:
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின், சேலம் மண்டல அளவிலான வட்டார வழக்கு சொல் அதிகார உருவாக்க கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்தை தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனர் விசயராகவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ் மொழி தான் உலகிலேயே மிகத் தொன்மையான மொழியாகும். எனவே தமிழ் மொழியை யாரும் அழிக்க முடியாது. தமிழ் சொற்களுடன் பிற மொழி சொற்களையும் கலந்து தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள் பேசுகிறார்கள். இதை தவிர்க்க வேண்டும். வருங்காலங்களில் தமிழ் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் தம்பிதுரை, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பொன்குமார், உதவி பேராசிரியர் சிவப்பிரகாசம் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினர். இதில் தமிழ் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.