ஆய்வு கூட்டம்
பழுதடைந்த வீடுகள் கணக்கெடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை யூனியனில் உள்ள 47 ஊராட்சிகளில் 1985-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அரசின் சார்பில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில் பழுதடைந்த மற்றும் பயன்படுத்த இயலாத வீடுகள் குறித்த கணக்கெடுக்கும் பணி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கணக்காளர், சமுதாய பயிற்றுனர் மற்றும் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் மூலம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரைச்செல்வி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கணக்கெடுப்பாளர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அப்போது அரசின் சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளில் பழுதடைந்த மற்றும் பயன்படுத்த இயலாத வீடுகள் குறித்து ஊராட்சி தலைவர்களுக்கு முழு விவரமும் தெரியும். ஆனால் இந்த வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட கணக்கெடுப்பாளர்கள் ஊராட்சி தலைவர்களிடம் கலந்து ஆலோசனை செய்யாமல் பெயரளவில் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இதனால் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஏராளமான வீடுகள் விடுபட்டுள்ளது. எனவே ஊராட்சி தலைவர்களுடன் இணைந்து கணக்கெடுப்பை சரியான முறையில் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜி, கோட்டை ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.