மத்திய மாநில அரசுகளின் திட்ட செயல்பாடு குறித்துகிராம ஊராட்சி தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம்


மத்திய மாநில அரசுகளின் திட்ட செயல்பாடு குறித்துகிராம ஊராட்சி தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 18 March 2023 12:30 AM IST (Updated: 18 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் கிராம பகுதிகளில் செயல்படுத்தப்படும் மத்திய மாநில அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்து ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

ஆய்வுக்கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 251 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மத்திய மாநில அரசுகள் மூலம் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களின் செயல்பாடு குறித்து கிராம ஊராட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், கிராம சபை கூட்டங்களை நடத்துதல், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உறுதி செய்தல், நெகிழி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

சுகாதாரமான குடிநீர்

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசுகையில், கிராம ஊராட்சிகளில் உள்ள சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொது கிணறுகள், குளங்கள் ஆகியவற்றை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். இதேபோல் கிராமப்புற பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் பராமரிப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதையும், அதன் பயன் தகுதியுள்ள பயனாளிகளுக்கு சென்று சேர்வதையும் ஊராட்சித் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஊராட்சித் தலைவர்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.ஊராட்சிகளில் பணியை மேற்கொள்ள பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் துறை அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story