வீட்டடி மனைகளுக்காக பாசன கால்வாய்கள் அழிப்பு
வீட்டடி மனைகளுக்காக பாசன கால்வாய்கள் அழிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
வீட்டடி மனைகளுக்காக பாசன கால்வாய்கள் அழிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அனீஷ் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். வேளாண்மைத்துறை இணை இயக்குனர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதி பிரச்சினைகளை எடுத்து கூறினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:- மதுரை கருப்பாயூரணி மற்றும் வளர்நகர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனம் தரக்கூடிய வகையில் பெரியாறு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் 350 ஏக்கர் நிலங்கள் பாசனம் வசதி பெறுகிறது. தற்போது இந்த நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளை, ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் கிரயம் செய்து வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயம் அழிந்து வருகிறது. மேலும் அவர்கள் பாசன கால்வாய்களை சேதப்படுத்தி அழிப்பதால் தண்ணீர் அடுத்த நிலங்களுக்கு செல்ல முடியாதநிலை உள்ளது என்றனர்.
கழிவுநீர் கலப்பு
அதற்கு கலெக்டர் அனிஷ் சேகர் பதிலளித்தார். அப்போது அவர், விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை தடுக்கத்தான் மதுரை மாவட்டத்தில் 'மாஸ்டர் பிளான்' தயார் செய்கிறோம். அதில் எந்தெந்த பகுதிகள் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமையும் இடங்களை அடையாளம் கண்டு, விவசாய நிலங்களை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
விவசாயிகள் கூறியதாவது:- கல்லணை ஊராட்சி மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீர், கடைகளில் வெளியேறும் சாக்கடை நீர் பாசன கால்வாயில் கலக்கிறது. மழைக்காலத்தில் ஒட்டுமொத்தமாக கலக்கிறது. அதனால், 2 ஆண்டாக விவசாயம் செய்ய முடியவில்லை. புகார் செய்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலூர் புதுசுக்கான்பட்டி கிராமத்தில் பெரியாறு பாசன கால்வாயில் 4-வது பகிர்மான கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த கால்வாயில் தென்னமரக்கன்றுகளை நட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் புகார் செய்து வருகிறோம். அந்த கால்வாயை மீட்டு பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகமாக வசூல்
வாடிப்பட்டி பகுதியில் நெல் அடிக்கும் களத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுகிறார்கள். தொடர்ந்து 4 கூட்டங்களில் மனு கொடுக்கிறேன். ஆனால் பலன் இல்லை. அங்கு 3 நெல் களம் இருந்தது. ஒரு களத்தில் பள்ளிக்கூடம் கட்டி விட்டார்கள். 2-வது களத்தில் பாதையாக பயன்படுத்துகிறார்கள். 3-வது களத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுகிறார்கள். விவசாயிகள் நெல் அடிக்க களத்திற்கு என்ன செய்வார்கள். வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை நேரடி அரசு நெல்கொள்முதலில் ஒரு மூட்டை நெல் போடுவதற்கு அரசு நிர்ணயித்த ரூ.20-க்கு பதிலாக ரூ.60, ரூ.80 என அதிகமாக வசூல் செய்கிறார்கள். இதை தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதிகாரிகள் அவர்களுக்கு துணை போகிறார்கள் என்றனர்.
நடவடிக்கை
அதன்பின் கலெக்டர் பேசும் போது, கல்லணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கழிவு நீர் கலக்காமல் இருக்க கல்லணை ஊராட்சி, அலங்காநல்லூர் பேரூராட்சிகளுக்கு நோட்டீஸ் விட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பாசனகால்வாய்களில் கழிவு நீர் விடுவதை அனுமதிக்க முடியாது. ஐகோர்ட்டு இதுபோல் பாசன கால்வாயில் கழிவு நீர் விடும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல கோடி அபராதம் விதித்த வரலாறு நடந்துள்ளது. நெல்கொள்முதல் நிலையங்களில் கூடுதல் கட்டணத்திற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். உடனே விவசாயி ஒருவர், ஆதாரத்தை கலெக்டரிடம் வழங்கினார். அதனை பெற்று கொண்ட கலெக்டர், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.