நாமக்கல்லில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்-அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு


நாமக்கல்லில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்-அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு
x
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல்லில் மேற்கு நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேற்கு நகர செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தரப்பட்டு உள்ளது. தமிழக கவர்னரை நாங்கள் மதிக்கிறோம். மக்களுக்காக சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை சட்டமாக்க கையெழுத்து போடுவது தான் கவர்னர் பணி. ஆனால் அவர் அதை செய்யாமல் இழுத்தடிக்கிறார்.

சமூக நீதியும், திராவிட மாடலும் காலாவதியாகிவிட்டது என கவர்னர் கூறுகிறார். திராவிட மாடல் என்பது நமது ரத்தத்தில் ஊறியதாகும். அது என்றைக்கும் காலாவதியாகாது. தி.மு.க.வின் கொள்கை சமூகநீதியாகும். சமூக நீதி தான் தமிழகத்தில் என்றைக்கும் நிலைத்து நிற்கும். மனு நீதி இங்கு எடுபடாது. 2 ஆண்டுகளில் 75 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றி உள்ளார். எனவே திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட துணை செயலாளர்கள் நலங்கிள்ளி, ராணி, நகர செயலாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், நகர்மன்ற தலைவர் கலாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story