வெளிமாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


வெளிமாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வேலைபார்த்து வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்பட்டது.

மதுரை

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வேலைபார்த்து வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்பட்டது.

வெளிமாநில தொழிலாளர்கள்

மதுரை மண்டல அளவிலான வெளிமாநில தொழிலாளர் ஒருங்கிணைப்பு திட்ட ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நடந்தது. அதாவது, வெளிமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கவும், அவர்களுக்கான சட்டப்படியான உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு வெளிமாநில தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு தலைவர், மதுரை தொழிலாளர் கூடுதல் கமிஷனர் குமரன் தலைமை தாங்கினார். இணை கமிஷனர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் ராஜசேகரன், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள், தொழிலாளர் உதவி கமிஷனர்கள், தொழிற்சாலை பாதுகாப்பு இயக்கக இணை இயக்குனர்கள், போலீஸ் உயரதிகாரிகள், சோக்கோ அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், வேலையளிப்போர் தரப்பு பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வெளிமாநில தொழிலாளர்களுக்கான சட்டப்படியான தொழிலாளர் சட்ட உரிமைகள், அரசின் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் உள்ள கடைகள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள், சினிமா தியேட்டர்கள், அழகு நிலையங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களை தொழிலாளர் துறையிலும், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களை தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கண்காணிப்பு

அமைப்புசாரா தொழில்களில் வேலை செய்துவரும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை தொழிலாளர் உதவி கமிஷனர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பணியிட விபத்துகள் குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, தொழிற்சாலைகளில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான சட்ட உரிமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பணியின் போது, வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களுக்கான இழப்பீட்டு தொகை குறித்து மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் விளக்கமளித்தார். மேலும், அவர்களின் பணி நிலைமை, குறைந்தபட்ச சம்பளம், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் விபத்து இழப்பீட்டு நிதி ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டது. குடும்பத்துடன் தங்கியிருந்து வேலைபார்க்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதா, 8 மணி நேர வேலை மட்டும் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த தகவல் மதுரை தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story