மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல குழு கூட்டம்
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல குழு கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல குழு கூட்டம் தலைவர் சுவிதாவிமல் தலைமையில் நடைபெற்றது. உதவி ஆணையர் சுரேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளின் தேவை குறித்து பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:- கருப்பசாமி (தி.மு.க):- தற்போது கோடை காலம் என்பதால் குடிதண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ரவிச்சந்திரன் (தி.மு.க.):- கடந்த 11 முறை நடந்த கூட்டத்தில் பேசியதையே திரும்ப பேசுகிறோம். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நேரடியாக செயல்படுத்த முடியவில்லை. ரூ.10 லட்சம் பணிக்கான தீர்மானத்தை கூட மாநகராட்சிக்கு ஒப்புதலுக்காக அனுப்புகிறோம். அப்படி என்றால் மண்டலம் எதற்கு? மண்டலத்திற்கான அதிகாரம் குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்திராகாந்தி (தி.மு.க.):- மேற்கு மண்டலத்தில் ஒரு திட்டப்பணி கூட நடக்கவில்லை. தெருக்கள் இருளில் மூழ்கிறது. தெருவிளக்குக்கான தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பேன்.
சுவேதாஜெரார்டு சத்தியன்(காங்கிரஸ்):- திருநகரில் புதியமீட்டர் பெட்டிகள் பொருத்தப்பட்டும் தெருவிளக்குகள் எரியவில்லை. கருப்பசாமி (அ.தி.மு.க.):- எனது 72-வது வார்டில் தெருக்களில் நடந்து செல்லமுடியாதபடி ஆறாக சாக்கடை ஓடுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை வேண்டும்.
விஜயா (கம்யூ):- ஹார்விப்பட்டி மைய பகுதியில் உள்ள பூங்காவில் ஒரு மாதத்திற்கு மேலாக விளக்குகள் எரியவில்லை. இதற்கு உடனடியாக தீர்வு ஏற்படாவிடில் பூங்காவில் உண்ணாவிரதம் இருப்பேன். இவ்வாறு பேசினார்கள். கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை.