பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டம், முரண்பாட்டின் முழு வடிவம்- மதுரையில் ஜி.கே.வாசன் பேட்டி


பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டம், முரண்பாட்டின் முழு வடிவம்- மதுரையில் ஜி.கே.வாசன் பேட்டி
x

பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டம் என்பது முரண்பாட்டின் முழு வடிவம் என மதுரையில் ஜி.கே.வாசன் கூறினார்.

மதுரை


பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டம் என்பது முரண்பாட்டின் முழு வடிவம் என மதுரையில் ஜி.கே.வாசன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனைகளை வழங்கி பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாட்னாவில் கூட்டம் நடத்தி உள்ளன. இந்த கூட்டத்தினால் எந்த பயனும் இல்லை. காரணம், பல மாநிலங்களில் பல கட்சிகள். சில மாநிலங்களில் சில தேசிய கட்சிகள்.

இவ்வாறாக முரண் உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்கள் இடங்களை நாடாளுமன்ற தேர்தலில் விட்டுகொடுக்க தயாராக இல்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டம் என்பது முரண்பாடுகளின் முழுவடிவமாக இருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்பில்லை.

தமிழகத்தை பொறுத்தவரையில், அ.தி.மு.க.- பா.ஜ.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி வலுவாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் எங்கள் கூட்டணி வெல்லும். இன்னும் சில மாதங்களில் புதிய கட்சிகள் எங்களது கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் ஆளுங்கட்சியின் தவறான செயல்பாட்டால் எதிர்மறை வாக்குகள் எங்கள் கூட்டணிக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

முகம் சுளிக்கின்றனர்

தி.மு.க. அரசு தொடர்ந்து மக்கள் மீது சுமையை ஏற்றி கொண்டிருக்கிறது. மின்கட்டணம், பால் கட்டணம், சொத்து வரி உயர்வு, தொழிலாளர் விரோத போக்கு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என பலவற்றை கூறலாம். போதை பொருட்கள் எங்கும் கிடைக்கிறது. மதுபானக்கடைகளுக்கு மூடுவிழா நடத்தினால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முடியும்.

தவறு செய்பவர்களை நல்லவர்களாக காட்ட நினைக்கும் தி.மு.க.வின் செயல்பாடுகளால் மக்கள் முகம் சுளிக்கின்றனர். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. பிரதமரின் அமெரிக்க பயணம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் உள்ளது.

காழ்ப்புணர்வு

தமிழக கவர்னர் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், தமிழகத்தில் ஆளுங்கட்சியினருக்கு மக்களிடம் செல்வாக்கு குறைந்து வருவதாலும், கவர்னரின் கருத்தை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் திரித்து பேசுகிறார்கள். கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு பணியை செய்து கொண்டிருக்கிறார். அவர் எங்கு போனாலும் சந்தேகமாக பார்க்கிறார்கள். மடியில் கனம் இருப்பவர்களுக்கு பயம் உள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சிறுவன் உள்ளிட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காமராஜர் பிறந்த நாள் விழா

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, ஜூலை 15-ந்தேதி, ஈரோட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த கூட்டம் மதுரையில் தற்போது நடந்துள்ளது. அதுபோல், ஆகஸ்டு மாதம் மூப்பனார் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக, அவரது மார்பளவு சிலை அரியலூர், நெல்லை, சேலம் ஆகிய இடங்களில் திறக்கப்படுகிறது. ஆகஸ்டு மாத இறுதியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய கருத்தரங்கமும் நடக்க இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், முன்னாள் எம்.பி. சித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்ட தலைவர் ராஜாங்கம், புறநகர் மாவட்ட தலைவர்கள் தனுஷ்கோடி, சக்தி வடிவேல், மாநில நிர்வாகிகள் சீனிவாசன், நடராஜன், பைரமூர்த்தி, மைதீன் பாட்ஷா மற்றும் தென் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story