நெல்லை-தாம்பரம், மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்


நெல்லை-தாம்பரம், மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்
x

நெல்லை-தாம்பரம், மேட்டுப்பாளையம் இடையேயான வாராந்திர சிறப்புக்கட்டண ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்று நேற்று நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை

நெல்லை-தாம்பரம், மேட்டுப்பாளையம் இடையேயான வாராந்திர சிறப்புக்கட்டண ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்று நேற்று நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தென்மாவட்ட எம்.பி.க்கள்

தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை கோட்ட ரெயில்வே எல்லைக்குள் அமைந்துள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கான எம்.பி.க்கள் கலந்து கொண்ட ரெயில்வே வளர்ச்சிக்கான ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை தாங்கினார். கோட்ட மேலாளர் அனந்த் வரவேற்றார்.

மதுரை எம்.பி. வெங்கடேசன், விருதுநகர் மாணிக்கம் தாகூர், தேனி ரவீந்திரநாத், சிவகங்கை கார்த்தி சிதம்பரம், திருச்சி திருநாவுக்கரசர், திண்டுக்கல் வேலுச்சாமி, பொள்ளாச்சி சண்முகசுந்தரம், தென்காசி தனுஷ் குமார், ராஜ்ய சபை உறுப்பினர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல, தென்னக ரெயில்வே தரப்பில், முதன்மை தலைமை இயக்க மேலாளர் நீனு இட்டியேரா மற்றும் முதன்மை தலைமை வர்த்தக மேலாளர், தலைமை நிர்வாக அலுவலர் (கட்டுமானம்), முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைதொடர்பு என்ஜினீயர், முதன்மை தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயர், முதன்மை தலைமை ஊழியர் விவகார அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெல்லை-தாம்பரம், மேட்டுப்பாளையம்

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கேரளமாநிலம் கொல்லம் மாவட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மதுரை ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆகியன குறித்து விளக்கினர்.

எம்.பி.க்கள் வலியுறுத்திய கோரிக்கைகள்:-

நெல்லை-தாம்பரம் மற்றும் நெல்லை-மேட்டுப்பாளையம் (தென்காசி வழி) வாராந்திர ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். சென்னை-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். ஐதராபாத்தில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை, நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். குருவாயூர்-புனலூர் ரெயிலை (வ.எண்.16327/16328) மதுரை வரை நீட்டிக்க வேண்டும். நெல்லை-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு இணைப்பு ரெயில் சேவை வழங்க வேண்டும்.

சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு சிவகாசியில் நிறுத்தம் வேண்டும். சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு திருமங்கலத்தில் இருமார்க்கங்களிலும் நிறுத்தம் வேண்டும். கோவை-நாகர்கோவில் ரெயிலுக்கு சாத்தூரில் நிறுத்தம் வேண்டும். நெல்லை-தாம்பரம் ரெயிலுக்கு கடையநல்லூர், சங்கரன்கோவிலில் நிறுத்தம் வேண்டும். ராஜபாளையம் அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் ரெயில் நிலையத்தை புதுப்பித்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

பொதிகை நிறுத்தம்

காயல்பட்டினம் ரெயில் நிலைய பிளாட்பாரங்களை மறுசீரமைக்க வேண்டும். காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருவாரூர் ரெயில் பாதையில் ஏற்கனவே இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். புதுக்கோட்டையில் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க வேண்டும். புதுடெல்லி-கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக பெங்களூருவுக்கு ரெயில் இயக்க வேண்டும். மதுரையில் இருந்து காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி ரெயில்சேவை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகள் அனைத்தும் ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு பின்னரே நிறைவேற்றப்படும் என்பதால், மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சாத்தியக்கூறு இருக்கும் கோரிக்கைகள் மட்டும் தென்னக ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story