பரமன்குறிச்சியில் தி.மு.க.அரசின் சாதனை விளக்க கூட்டம்
பரமன்குறிச்சியில் தி.மு.க.அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
உடன்குடி:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பரமன்குறிச்சி பஜாரில் நடந்தது. தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலர் இளங்கோ தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெசி பொன்ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், "இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மதவாத அரசியலில் ஈடுபட்டது போல் தமிழகத்திலும் பா.ஜ.க. முயற்சி செய்கிறது. தமிழகத்தில் அக்கட்சியின் மதவாதம் வெற்றி பெறாது. மதவாத அரசியலில் ஈடுபட நினைத்த அக்கட்சியின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முழுமையான வெற்றியை பெறும்" என்றார்.
கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர்கள் சரத்பாலா, செந்தூர் பாலகிருஷ்ணன், ஒன்றிய துணைசெயலர்கள் மகராஜன், இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ் வரவேற்றார். வட்டன்விளை கிளை செயலர் செல்வகுமார் நன்றி கூறினார்.