சமச்சீர் விவசாயத்தை உறுதி செய்ய வேண்டும்


சமச்சீர் விவசாயத்தை உறுதி செய்ய வேண்டும்
x

பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் நீர் விைரயம் அதிகரித்துள்ளது. சமச்சீர் வினியோகம் போல சமச்சீர் விவசாயத்தை உறுதி செய்ய வேண்டும் என பாலாறு படுகை பாசன சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திருப்பூர்

பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் நீர் விைரயம் அதிகரித்துள்ளது. சமச்சீர் வினியோகம் போல சமச்சீர் விவசாயத்தை உறுதி செய்ய வேண்டும் என பாலாறு படுகை பாசன சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

பி.ஏ.பி. பாசன திட்டம்

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் பாலாறு படுகை பாசன சங்க தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களின் கூட்டம் குடிமங்கலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு உடுமலை கால்வாய் முன்னாள் பகிர்மானக் குழு தலைவர் அருண் தலைமை தாங்கினார். முன்னாள் பகிர்மானக்குழு தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருமூர்த்தி நீர்த்தேக்க முன்னாள் திட்ட குழுத்தலைவர் மெடிக்கல் பரமசிவம் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து தண்ணீர் வீணாவதை துரித நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த உத்தரவிட்டு நிதி ஒதுக்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிபெற்று தந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய நபர்களான வி.கே பழனிச்சாமி, சி.சுப்பிரமணியம், நா.மகாலிங்கம் ஆகியோருக்கு சிலை அமைக்கவும், அவர்கள் பெயர்களில் அரங்கங்கள் கட்டவும் அக்டோபர் 7-ந் தேதியை பி.ஏ.பி. தினமாக கொண்டாடவும் உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சருக்கும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி பகிர்மான குழு மற்றும் திட்டக்குழு தேர்தல்களை கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் நடத்தி முடிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பாசன சபை தலைவர்களின் முடிவுக்கு மாறாக திருப்பூர் பகுதி விவசாயிகளுக்கு தனியாக கூட்டம் நடத்தியது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை அவமதிப்பாகும்.

சமச்சீர் வினியோகம்

பாலாறு படுகை என்பது 134 பாசன சங்கங்களை உள்ளடக்கியது. கடந்த காலங்களில் வெள்ளகோவில் கிளைகால்வாயில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடைமுறைப்படுத்தப்பட்ட பாசன நடைமுறைகளை கருத்தில் கொள்ள வேண்டும். கடுமையான வறட்சி காலங்களில் வெள்ளகோவில் கிளைகால்வாய்க்கு சீராக தண்ணீர் சென்று சேரவில்லை என்பதற்காக ஆங்காங்கே பல்வேறு கிளை கால்வாய்களை திடீரென அடைத்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது தற்போதும் அதே நடைமுறைதான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதனால் அந்தந்த கிளை கால்வாய்களில் பாசனம் பெரும் விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் எனவே எக்காரணம் கொண்டும் தண்ணீர் திறக்கப்பட்ட கால்வாய்களை இடையிடையே அடைக்கக்கூடாது. சமச்சீர் வினியோகம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். வெள்ளகோவில் கிளை கால்வாய்க்கு தொடர்ந்து 15 நாட்கள் தண்ணீர் வழங்குவது போலவே அனைத்து கால்வாய்களுக்கும் அடைப்பு ஏதும் இல்லாமல் 7, 14, 15 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும். பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் நீர் விரையம் என்பது கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது 129 கிலோமீட்டர் தூரமுள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் ஏற்படும் தண்ணீர் விரையத்தை அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடு இல்லாமல் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

நீர் இழப்பு

இனிவரும் காலங்களில் அவ்வாறு ஏற்றுக்கொள்ள மேல் பகுதி விவசாயிகள் தயாராக இல்லை என்பதை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பிரதான கால்வாயில் கிளை கால்வாய்களின் தூரத்தை கணக்கிட்டு குறிப்பிட்ட கிளை கால்வாய்கள் வரை ஏற்படும் நீர் விரையத்தை துல்லியமாக கணக்கிட்டு அவர்களுக்கு என்ன விகிதாச்சாரமோ அதை மட்டும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமச்சீர் விநியோகம் என்பது போலவே சமச்சீர் விரையத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். '0'பாயிண்டில் இருக்கும் ஒரு விவசாயிக்கும் 129 -வது கிலோ மீட்டரில் இருக்கும் ஒரு விவசாயிக்கும் ஒரே அளவில் நீர் இழப்பு என்பது இனிமேல் ஏற்றுக்கொள்ள இயலாது. பிரதான கால்வாயில் சமச்சீர் வினியோகம் என்பது போலவே சமச்சீர் விவசாயமும் நடைபெறுவதை நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் பகிர்மான குழு தலைவர்கள் பொங்கலூர் கோபால், குண்டடம் ஈஸ்வரன், வடசித்தூர் நல்லதம்பி மற்றும் பாசன சங்கத் தலைவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.


Related Tags :
Next Story