மேகதாது அணை - தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல்
மேகதாது அணை திட்டத்தை கொண்டு வரும் கர்நாடக அரசின் முயற்சி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறுவதாகும்
சென்னை,
கர்நாடகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தியது. இதற்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-
மேகதாது அணை திட்டத்தை கொண்டு வரும் கர்நாடக அரசின் முயற்சி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறுவதாகும். மேகதாது அணை விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை உள்ளிட்ட எதையும் செய்ய முடியாது. புதிய திட்டங்களுக்கான அனுமதி போன்றவற்றை பரிசீலிப்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி கிடையாது. காவிரி விவகாரத்தில் தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதே காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணியாகும். கர்நாடக அரசு அனுமதியின்றி செயல்படுத்தும் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது. இவ்வாறு அந்த பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.