மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு பாதகமான நடவடிக்கைகள் எடுப்பதை அண்டை மாநிலங்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கர்நாடகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறி வருகிறது. இது தொடர்பாக அண்மையில் டெல்லியில் கர்நாடக துணை முதல்-மந்திரி அளித்த பேட்டியில், 'மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. இதை புரிய வைக்க முயற்சிக்கிறோம்' என்று கூறி இருக்கிறார்.

மேகதாது குறித்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணை குறித்து தமிழ்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து கர்நாடக துணை முதல்-மந்திரி பேட்டி அளிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தற்போது கர்நாடக அணைகளின் மொத்த கொள்ளளவில் 60 சதவீத நீர் இருக்கின்றபோதே, தமிழ்நாட்டுக்கு மாதாந்திர அடிப்படையில் தர வேண்டிய உரிய நீரை தர கர்நாடகம் மறுக்கிறது. அணைகள் நிரம்பி வழிந்தால்தான் உபரி நீர் திறந்து விடப்படும் என்ற முடிவில் கர்நாடக அரசு இருக்கிறது. இந்த நிலையில் 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

இந்த நிலையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் கர்நாடக முதல்-மந்திரிக்கு புரிய வைத்து, மேகதாது திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story