மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் கே.சங்மா தரிசனம்


மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் கே.சங்மா தரிசனம்
x

வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் கே.சங்மா தரிசனம் செய்தார். அங்கு நடந்த சிறப்பு திருப்பலியில் அவர் தனது குடும்பத்துடன் பங்கேற்றார்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் கே.சங்மா தரிசனம் செய்தார். அங்கு நடந்த சிறப்பு திருப்பலியில் அவர் தனது குடும்பத்துடன் பங்கேற்றார்.

மேகாலயா முதல்-மந்திரி தரிசனம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்திற்கு மேகாலயா மாநில முதல்-மந்திரி கான்ராட் கே. சங்மா நேற்று வந்து புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார்.

நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் பின்னர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்து, அங்கிருந்து சாலை மார்க்்கமாக நேற்று காலை வேளாங்கண்ணி வருகை புரிந்தார்.

சிறப்பு திருப்பலியில் பங்கேற்பு

தனது மனைவி மெஹ்தாப் மற்றும் குடும்பத்தினருடன் மேகாலயா மாநில முதல்-மந்திரி கான்ராட் கே.சங்மா ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார். பேராலயம் வந்த மேகாலயா முதல்-மந்திரிக்கு நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் பேராலய நிர்வாகம் சார்பாக சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் நடந்த சிறப்பு திருப்பலியில் முதல்-மந்திரி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவர்களுக்கு பேராலயம் சார்பில் மாலை சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி பிரசாதமாக வழங்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

தரிசனத்தை முடித்த மேகாலயா முதல்-மந்திரி சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் சென்று பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்றார்.

மேகாலயா மாநில முதல்-மந்திரி வருகையை முன்னிட்டு நாகை மாவட்ட போலீஸ் துறை சார்பில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story