மேலாத்தூர் கொழுவைநல்லூர் தூயகித்தேரி அம்மாள் ஆலய திருவிழா தேர் பவனி
மேலாத்தூர் கொழுவைநல்லூர் தூயகித்தேரி அம்மாள் ஆலய திருவிழா தேர் பவனி நடந்தது.
ஆறுமுகநேரி:
மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து கொழுவைநல்லூர் தூய கித்தேரி அம்மாள் ஆலய திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் கொம்புத்துறை பங்குத்தந்தை விக்டர் லோபோ கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினார்.
இதில் சேர்ந்தபூமங்களம் பங்குத்தந்தை செல்வன் பர்னான்டோ அடிகளார் மறையுரை நிகழ்த்தினார். தொடர்ந்து 10 நாட்களும் மாலையில் ஆராதனை, மறையுரை நடைபெற்றது. கடந்த 7-ந் தேதி மாலையில் சேர்ந்தபூமங்களம் பங்கு மக்களின் சார்பாக திருப்பலி நடைபெற்றது. மறுநாள் ஆத்தூர் பங்கு மக்கள் சார்பாகவும், நேற்றுமுன்தினம் மாலையில் ஆராதனை, திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இரவு 9 மணிக்கு புனித கித்தேரி அம்மாள் சொரூபம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது. நேற்று காலையில் திருவிழா ஆடம்பர திருப்பலி நடந்தது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றியுள்ள தெருக்கள் வழியாக தேர் பவனி ெசன்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் அப்பகுதி கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.