மேலூர் ஊராட்சிமன்ற பெண் தலைவர் விஷம் குடித்தார்


மேலூர் ஊராட்சிமன்ற பெண் தலைவர் விஷம் குடித்தார்
x

குன்னூர் அருகே உள்ள மேலூர் ஊராட்சிமன்ற பெண் தலைவர் பணி செய்ய விடாமல் துணைத்தலைவர் தடுத்ததாக கூறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

குன்னூர் அருகே உள்ள மேலூர் ஊராட்சிமன்ற பெண் தலைவர் பணி செய்ய விடாமல் துணைத்தலைவர் தடுத்ததாக கூறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை முயற்சி

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மேலூர் கிராம ஊராட்சி. இந்த ஊராட்சி மன்ற தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ரேணுகாதேவி (வயது 48) என்பவர் இருந்து வருகிறார். ஊராட்சியில் 12 தி.மு.க., உறுப்பினர்கள், 3 அ.தி.மு.க., உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று ஊராட்சி தலைவர் ரேணுகாதேவி, தனது வீட்டில் விஷம் குடித்து திடீரென தற்கொலைக்கு முயன்றார். இதைத்தொடர்ந்து மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பணிகளை தடுத்தார்

இதுகுறித்து ஊராட்சி தலைவர் ரேணுகாதேவி கூறும்போது, மேலூர் ஊராட்சி துணை தலைவர் நாகராஜ் எப்போதும் என்னிடம் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். மேலும் வளர்ச்சி பணிகளை செய்ய விடாமல் தடுத்து வந்தார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதால் தற்கொலைக்கு முயன்றேன் என்றார். இதுகுறித்து துணை தலைவர் நாகராஜ் கூறும்போது, ஊராட்சி தலைவருக்கு எந்த வித நெருக்கடியும் கொடுக்கவில்லை. சாலை அமைப்பது தொடர்பாக ரூ.2¾ லட்சம் முறைகேடு செய்து உள்ளார் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக பெற்றோம்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் முறைகேட்டில் ஈடுபட்டதை திசை திருப்புவதற்காக எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்றார். இந்த சம்பவம் குறித்து கொலக்கம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி தலைவர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story