மேல்விஷாரம் புகார் இல்லாத நகரமாக இருந்து வருகிறது
மேல்விஷாரம் புகார் இல்லாத நகரமாக இருந்து வருவதாக நகராட்சி கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.
மேல்விஷாரம் புகார் இல்லாத நகரமாக இருந்து வருவதாக நகராட்சி கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.
நகராட்சி கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குன்சார் அகமது, பொறியாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
புகார் இல்லாத நகரம்
ஜபர்:- பெரும்பாலான சாலைகள், குடிநீர் பைப்புகள் பழுதடைந்துள்ளது. அதனை சீர் செய்து தர வேண்டும்.
தலைவர்:- மூன்று பிரிவுகளாக பிரித்து சாலை செப்பனிடும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். அன்சா நகர் பகுதிக்கு சாலை வசதி செய்து தரப்படும். கடந்த 4 மாத காலமாக புகார் இல்லாத நகரமாக மேல்விஷாரம் இருந்து வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
உதயகுமார்:- குடிநீர் சப்ளை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கொள்ளளவு குறைவாக இருப்பதால் வாரத்திற்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் மேலும் ஒரு தொட்டி அமைத்து தர வேண்டும்.
தலைவர்:- இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் வரும் காலங்களில் தினசரி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
அக்பர்:- ஜமீலாபாத் பகுதியில் பெரும்பாலான இடங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. பாதிப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்:- உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலை, குடிநீர் வசதி
ஜமுனா ராணி:- என்னுடைய வார்டில் பொதுக் கழிப்பிடம் உள்ளது. அது போதுமானதாக இல்லாததால் புதிய கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்.
லட்சுமி:- என்னுடைய வார்டில் சாலை, குடிநீர், கழிவு நீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும்.
தலைவர்:- சாலை அமைக்க நிதி கோரப்பட்டுள்ளது. வந்தவுடன் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
கோபிநாத்:- நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அண்ணா, கருணாநிதி சிலை அமைக்க இடம் ஒதுக்கித்தர வேண்டும். கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி டெங்கு பரவும் அபாயம் உள்ளது.
தலைவர்:- சிலைகள் அமைப்பது குறித்து மனு கொடுத்தால் தீர்மானம் வைத்து நிறைவேற்றலாம்.
ஜெயந்தி:- என்னுடைய வார்டில் சாலை, குடிநீர், கழிவு நீர் கால்வாய் வசதி இல்லை. தெருவிளக்கு எறிவதில்லை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.