கிணற்றில் மூழ்கி ஊராட்சி வார்டு உறுப்பினர் பலி
நச்சலூர் அருகே கிணற்றில் மூழ்கி ஊராட்சி வார்டு உறுப்பினர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
வார்டு உறுப்பினர்
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள ஆர்ச்சாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கதுரை (வயது 45). இவர் ஆர்ச்சாம்பட்டி ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினராக இருந்தார். இவர் சின்னப்பனையூரில் வீராசாமி என்பவரது வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை ரெங்கதுரை வயலில் உள்ள கிணற்றில் இருந்து மின்மோட்டாரை மேலே தூக்கி உள்ளார்.
அப்போது மோட்டாரில் இணைந்து இருந்த தண்ணீர் குழாய் உடைந்து கிணற்றில் விழுந்துள்ளது. குழாயை எடுப்பதற்காக கிணற்றுக்குள் குதித்து குழாயை கயிற்றில் கட்டி ரெங்கதுரை மேலே தூக்கி உள்ளார். அப்போது கயிறு அவிழ்ந்து குழாய் கிணற்றில் விழுந்தது. மீண்டும் அதனை தூக்குவதற்காக ரெங்கதுரை தண்ணீரில் மூழ்கி குழாயின் ஒரு முனையில் கயிற்றை கட்டி உள்ளார். குழாயை மீண்டும் மேலே தூக்கும்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து ரெங்கதுரையை உறவினர்கள் தேடியபோது அவரது துணிகள் கிணற்றின் அருகே இருந்துள்ளது.
பிணமாக மீட்பு
இதுகுறித்து ரெங்க துரையின் உறவினர்கள் குளித்தலை போலீஸ் நிலையத்திற்கும், முசிறி தீயணைப்பு துறைக்கும் தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், முசிறி தீயணைப்புத் துறை அலுவலர் அந்தோணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் 1 மணி நேரம் போராடி ரெங்கதுரையை பிணமாக மீட்டனர். அப்போது அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து ரெங்கதுரையின் உடலை குளித்தலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.