ஊராட்சி மன்ற உறுப்பினர் நூதன போராட்டம்
திருவட்டார் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் நூதன போராட்டம்
திருவட்டார்,
திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குமரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பூவன்கோட்டில் ஒன்றிய நிதியில் வடிகால் கட்டுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பின்பு பள்ளம் ேதாண்டப்பட்ட இடத்தில் கிடந்த மண்ணை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருட்டுப்போன மண்ணை திரும்ப ஒப்படைக்க கேட்டு தே.மு.தி.க.வைச் சேர்ந்த குமரங்குடி ஊராட்சி மன்ற உறுப்பினர் கிறிஸ்டோபர் நேற்று திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் ஒரு கூைடயில் மண் மற்றும் மண்வெட்டியுடன் வந்து அலுவலக அறையின் வாசலில் கையில் மனுவை ஏந்தியபடி படுத்து வணங்கி கோஷம் எழுப்பினார்.
போராட்டத்தில் தே.மு.தி.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஐடன் சோனி உள்பட சிலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதாவிடம் அவர் மனு அளித்தார். அப்போது, ஒன்றிய தலைவர் ஜெகநாதன் உடனிருந்தார். மண் திருட்டுக்கு நஷ்டஈடு வழங்கவில்லை என்றால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக உறுப்பினர் கிறிஸ்டோபர் கூறினார்.
இந்தநிலையில், ஊராட்சி மன்ற உறுப்பினர் கிறிஸ்டோபர் உட்பட சிலர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடி கோஷம் எழுப்பி வேலை செய்ய விடாமல் இடையூறு செய்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.