ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
சோளிங்கர் ஒன்றிய குழு கூட்டத்தில் பெண் உறுப்பினர்களுடன் அவர்களது கணவர்களும் பங்கேற்ற நிலையில் ஒன்றிய குழு தலைவரின் செயல்பாடுகளை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
சோளிங்கர்
சோளிங்கர் ஒன்றிய குழு கூட்டத்தில் பெண் உறுப்பினர்களுடன் அவர்களது கணவர்களும் பங்கேற்ற நிலையில் ஒன்றிய குழு தலைவரின் செயல்பாடுகளை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் கலைக்குமார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் சவுந்தரராஜன், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பிரபாகரன் வரவேற்றார்.
இந்த கூட்டம் காலை 11 மணி என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 12 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் காங்கிரஸ் பெண் உறுப்பினர் கணவர் கார்த்திகேயன் டெண்டர் விடுவதில் குழப்பம் உள்ளதாகவும் டெண்டர் விடுவதில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் பேசினார். உறுப்பினர் தான் பேச வேண்டும். நீங்கள் ஏன் பேசுகிறீர்கள். அமருங்கள் என்று ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் கூறினார். இதைத்தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
குற்றச்சாட்டு
அப்போது பேசிய ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ''ஒன்றிய வளர்ச்சி பணிகளுக்கான அரசு நிதியை ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தெரியாமல் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பணியை வழங்குகிறார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினால் உரத்த குரலில் அதட்டலாக சொல்கிறார். ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட அலுவலர்கள் ஆய்வு செய்யவரும் போது அப்பகுதி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.
கடந்த வாரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்ச்சி குறித்து எந்த ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தவில்லை. எனவே நாங்கள்வெளி நடப்பு செய்துள்ளோம்'' என்றனர்.
இதனை தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, ''கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் இருக்கையில் இருந்தனர். அவர்களை வெளியேறுமாறு கூறியும் யாரும் வெளியேறவில்லை.
உறுப்பினர்கள் குறைந்த எண்ணிக்கையில் வந்ததால். கூட்டம் வேறொரு நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டது. மறு தேதி அறிவித்து வழக்கம் போல கூட்டம் நடத்தப்படும்'' என்றார்.