12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி:உயர்கல்வி படிக்க தேவையான வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்படும்கலெக்டர் பழனி பேச்சு
உயர்கல்வி படிக்க தேவையான வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்படும் என திண்டிவனத்தில் நடந்த 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலெக்டர் பழனி பேசினார்.
திண்டிவனம்,
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு, உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கான உயர்வுக்கு படி என்ற 2-ம் கட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் பழனி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
சமூகத்தில் மரியாதை
திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 197 மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்து, உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கு உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சியின் வாயிலாக வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இன்றியும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, விடுதியில் தங்கி படித்தலுக்கான வழிகாட்டுதல், கல்வி கடன், முதல் பட்டதாரி சான்றிதழ், கல்வி உதவித்தொகை போன்றவை குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட உள்ளது.மாணவர்கள் உயர்கல்வி பயில்வதால் சமூகத்தில் நல்ல மரியாதை, மன நிறைவான. வாழ்க்கை கிடைக்கும். பெண்களுக்கு உயர்கல்வி எதற்கு, என்ற தவறான புரிதல் சிலரிடம் காணப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். ஒரு பெண் கல்வி பயின்றால் அந்த குடும்பமே முன்னேறும்.
முன்னோடி மாவட்டமாக மாற்றவேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து முன்னோடி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே குறிக்கோளாகும்.
விடுபட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசால் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உயர்வுக்கு படி வழிகாட்டுதல் கையேடு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாலமுருகன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜாம்பாள், உதவி இயக்குனர் (திறன் மேம்பாடு) சிவ நடராஜன், திண்டிவனம் தாசில்தார் அலெக்சாண்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், திண்டிவனம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் தமிழழகன், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சிவசுப்பிரமணியன், மகாத்மா காந்தி தேசிய உறுப்பினர் ஓம் பிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.