விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில்நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு வழிகாட்டுதல் பயிற்சிகலெக்டர் தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு வழிகாட்டுதல் பயிற்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரிக்கனவு வழிகாட்டுதல் பயிற்சி நேற்று நடைபெற்றது. இப்பயிற்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய, தேர்வு எழுதாத பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் தமது கல்வியை தொடர வாய்ப்பு அளிக்கும்பொருட்டும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் வழங்கும் வகையில் வழிகாட்டுதல் குழு செயல்பட உள்ளது.
அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய 3 மையங்களில் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான இப்பயிற்சியில் 1,995 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சி பெற்ற அனைவரும் வருகிற 8-ந் தேதி முதல் பள்ளி அளவில் உயர்கல்வி வழிகாட்டல் குழுவாக செயல்பட்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதலை வழங்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனவேல், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) செல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.