வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பருத்தியை விலை குறைத்து ஏலம் கேட்பதாக விவசாயிகள் சாலை மறியல்
பருத்தியை விலை குறைத்து ஏலம் கேட்பதாக விவசாயிகள் சாலை மறியல்
சத்தியமங்கலத்தில் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பருத்தியை விலை குறைத்து ஏலம் கேட்பதாக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
சாலை மறியல்
சத்தியமங்கலம் கோபி ரோட்டில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நேற்று வழக்கம்போல் பருத்தி ஏலம் தொடங்கியது.
இதில் ஒரு குவிண்டால் 6 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 9 ஆயிரத்து 700 ரூபாய் வரை ஏலம் போனது. கடந்த வாரம் ஒரு குவிண்டால் பருத்தி 10 ஆயிரத்து 800 ரூபாய்க்கு ஏலம் போனது. அதனால் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து விலை குறைவாக பருத்தியை ஏலம் எடுப்பதாக புகார் கூறி விவசாயிகள், பாதியிலேயே ஏலத்தை நிறுத்தினார்கள். பின்னர் விவசாயிகள் அனைவரும் சத்தியில் இருந்து கோபி செல்லும் ரோட்டில் உட்கார்ந்து மாலை 4.30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நஷ்டம்
இதுபற்றி தகவல் கிடைத்த உடன் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி. இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா சோபியா(பொறுப்பு) ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
உடனடியாக விவசாயிகளை சமாதானப்படுத்தி கூட்டுறவு சங்க கட்டிடத்திற்கு அழைத்து வந்தார்கள். அப்போது விவசாயிகள் கூறும்போது, வியாபாரிகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து விலையை குறைத்து விடுகிறார்கள். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த வாரம் 10 ஆயிரத்து 800 ரூபாய்க்கு ஏலம் போன பருத்தி இந்த வாரம் ஒரு குவிண்டால் 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் கூறுகிறார்கள். இது முறையற்றது, ஆகவே இந்த ஏலத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
ஏலம் ரத்து
மேலும் ஏலம் எத்தனை மணிக்கு நடைபெறுகிறது என்பதை பற்றி எங்களுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் தருவது இல்லை, விவசாயிகளை அதிகாரிகள் மதிப்பதில்லை, என்றார்கள்.
இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தையின் முடிவில் நேற்று நடந்த ஏலம் அனைத்தையும் ரத்து செய்வதாகவும் நாளை (வியாழக்கிழமை) ஏலம் நடத்துவது என்றும். இனிமேல் ஏலம் பகல் 2 மணிக்கு நடைபெறும் என்றும் முடிவெடுத்து அறிவித்தார்கள், அதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டு சமாதானம் அடைந்தார்கள். பருத்தி மூட்டைகள் பாதுகாப்பாக கிடங்கில் அடுக்கிவைக்கப்பட்டன. விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.