அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கு தகுதி அடிப்படையில் மையப் பொறுப்பாளர்கள் நியமனம்-மாவட்ட கலெக்டர் தகவல்


அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கு தகுதி அடிப்படையில் மையப் பொறுப்பாளர்கள் நியமனம்-மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 May 2023 5:00 AM IST (Updated: 13 May 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கு தகுதி அடிப்படையில் மையப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

நீலகிரி

ஊட்டி

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கு தகுதி அடிப்படையில் மையப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

காலை உணவு திட்டம்

தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. அதன்படி அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி பள்ளிக்கூட சமையல் அறையை நிர்வகிப்பது, மாணவர்களுக்கு உணவு சமைத்தல் மற்றும் பரிமாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிகமாக பணியாற்ற சுய உதவி குழுவினர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள சுய உதவி குழுவினராக இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் மையப் பொறுப்பாளர்கள் அதே பகுதியில் உள்ள கிராமம் மற்றும் நகரத்தில் வசிக்க வேண்டும்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலை உணவை சமைத்து பரிமாறுவதற்கு போதிய அடிப்படை திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் சுய உதவி குழு உறுப்பினர் குழந்தை அதே பள்ளியில் 1 முதல் 5-ம் வரை படிக்க வேண்டும். பின்னர் 5 -ம் வகுப்பு நிறைவு செய்யும் செய்தல் அல்லது வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்றால் மைய பொறுப்பாளர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு ஒருவர் பணியில் அமர்த்தப்படுவார். இப்பணியில் சேர குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் மகளிர் இணையதள வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள முதன்மை தேர்வு குழுவால் தற்காலிக பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இப்பணி தற்காலிக மற்றும் விருப்பமான பணி மட்டுமே. அரசு நிர்ணயித்துள்ள மதிப்பூதியம் வழங்கப்படும். இதர படிகள் வழங்கப்பட மாட்டாது. இப்பணிக்கு தேர்வு செய்யும் முதன்மை தேர்வு குழுவினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது ஏதேனும் புகார்கள் வரப்பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story