400 ஆண்டுகள் பழமையான நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு


400 ஆண்டுகள் பழமையான நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

400 ஆண்டுகள் பழமையான நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் ஒரு பழமையான சிற்பம் இருப்பதாக அவ்வூரை சேர்ந்த ராமலிங்கம் அம்பலம் என்பவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிற்பம் 400 ஆண்டுகள் பழமையான நாயக்கர் கால போர்வீரனின் நடுகல் சிற்பம் என்று தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மன்னர்கள் தங்கள் பகுதியில் வீரதீர செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு நடுகல் எடுப்பது மரபாகும். இந்த சிற்பமும் அந்த வகையில் வந்தவையே. இது ஜெய புஷ்பவன நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் 2 அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலையில் வலதுபுறம் சரிந்த கொண்டையும், நீண்ட காதுகளுடனும், மார்பில் ஆபரணங்களுடனும், வலது கையில் கத்தியை உயர்த்தி பிடித்தபடி, இடது கையில் கதை போன்ற ஆயுதத்தை கீழே ஊன்றியபடியும், இடையில் ஆடையும், வலதுபுறம் குறுவாள், கெண்டைக்கால் பகுதியில் வீரக்கழலை அணிந்தும், கைகளில் வளையல்கள் அணிந்தும் சிற்பம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

இதை பார்க்கும் போது வெள்ளிக்குறிச்சியில் நாயக்கர்களின் போர் வீரர்கள் இருந்திருக்க வேண்டும். இங்கு முறையான ஆய்வு மேற்கொண்டால் இந்த ஊரின் பழமையான வரலாற்றை அறியலாம் என்றனர்.


Next Story