குறுவை சாகுபடியில் ஏற்பட்டுள்ள இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடியில் ஏற்பட்டுள்ள இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடியில் ஏற்பட்டுள்ள இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலை கருகல் நோய்
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு சில பகுதிகளில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் அறிகுறிகள் தென்படுகிறது.
இலைக்கருகல் அறிகுறியின் ஆரம்ப நிலையில் லேசான பச்சை நிறத்தில் நீர்க்கசிவுள்ள அல்லது மஞ்சள் நிறப்புள்ளிகள் இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றுகிறது.
கட்டுப்படுத்தும் வழிமுறை
இதனால் இலை நுனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடுகின்றது. இத்தகைய தாக்குதல் விளிம்புகளின் வழியே பரவி இலைகளுக்கும் பரவுகின்றது. நோய் தீவிரமாகும்போது இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்கள் அல்லது கருகிய திட்டுக்களை இலைப்பரப்பில் உண்டாக்குகிறது. இவற்றிற்கு அருகில் உள்ள இலையின் பச்சை நிறப்பகுதி கிழிந்து காணப்படும்.
நோய் முற்றிய நிலையில் அனைத்து இலைகளும் தாக்கப்பட்டு பயிர் முதிர்வதற்கு முன்பே காய்ந்துவிடும். இதை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் கொண்டு ஈரவிதை நேர்த்தி செய்யலாம். 60 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் சூடோமோனாஸ் தூளை நன்கு கலக்கி 60 கிலோ விதையை இக்கலவையில் 24 மணி நேரம் ஊறவைத்த பின் முளைகட்டி நாற்றங்காலில் விதைக்கலாம்.
தீவிரமாகும்போது...
சூடோமோனாஸ் துகள் தயாரிப்பு கொண்டு விதைநேர்த்தி செய்தல். நாற்றுக்களின் வேர் நனைத்தல் மற்றும் நட்ட 40 மற்றும் 50-ம் நாளில் இலை வழியாக தெளித்தல் (2 கிராம் துகள் தயாரிப்பு ஒரு லிட்டர் தண்ணீரில்) ஆகிய மூன்று முறைகளையும் பின்பற்றுவதால் பாக்டீரியா நோய்களை கட்டுப்படுத்தலாம். நோயின் தாக்குதல் தீவிரமாக இருக்கும்போது எக்டேருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்சிகுளோரைடு 1250 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.