தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்;கோபி வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்


தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்;கோபி வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்
x

தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு

கோபி

தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

வெள்ளை ஈக்கள் தாக்குதல்

கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் சுமார் 3 ஆயிரத்து 460 ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நிலவி வரும் பனி மற்றும் அதிக வெப்பம் காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்க வாய்ப்பு உள்ளது. அதனை தடுக்கும் முறைகள் குறித்து கோபிசெட்டிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முரளி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் அடி பாகத்தில் சுருள் வடிவத்தில் முட்டைகள் காணப்படும். குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை ஓலைகளின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவ கழிவுகள் கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன. இவற்றின் மேல் கேப்னோடியம் எனும் கரும்பூசனம் தொடர்கிறது. இப் பூச்சிகளின் பாதிப்பால் மகசூல் இழப்பு பெருமளவில் ஏற்படுவதில்லை.

பாதிக்கின்றன

வெள்ளை ஈக்கள் அனைத்து தென்னை ரகங்களிலும் காணப்பட்டாலும் சவுகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, கென்தாளி குட்டை, மலேசியன் பச்சை குட்டை ஆகிய குட்டை ரகங்களிலும், குட்டை, நெட்டை வீரிய ஓட்டு ரகங்களிலும் அதிக அளவில் தாக்குதலை ஏற்படுத்துகின்றன. இவை காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களிலும் பாதிப்பை உண்டாக்குகின்றன. இப்பூச்சிகள் வாழை, வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி ஆகிய பயிர்களிலும் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றன.

ஆகஸ்டு முதல் டிசம்பர் மாதம் வரை பருவமழை குறைவினால் ஏற்படும் வறட்சி, அதிக அளவு வெப்பம் மற்றும் குறைந்த காற்றின் ஈரப்பதம் ஆகியன இப்பூச்சியின் அதீத பெருக்கத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஒட்டும் பொறிகள்

மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள் வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையது. இதனால் மஞ்சள் நிறத்திலான ஒட்டும் பொறிகளை (நீளம் 5 அடி, அகலம் 1½ அடி) ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்கவிட்டு பூச்சிகளில் நடமாட்டத்தை கண்காணிக்கவும்.

வெள்ளை ஈக்கள் அதிக எண்ணிக்கையில் பரவும் போது என் கார்ஸியா ஒட்டுண்ணிகள், காக்ஸினெல்லிட் பொறி வண்டுகள் ஆகிய நன்மை செய்யும் பூச்சிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். எனவே தோப்புகளில் இவ்வகை நன்மை செய்யும் பூச்சிகள் காணப்படும் ஓலைகளை சிறிய அளவில் வெட்டி பாதிப்பு அதிகமாக இருக்கும் மரங்களில் உள்ள ஓலைகளின் அடிப்பகுதியில் ஸ்டேப்ளர் பின் கொண்டு பொருத்தலாம்.

கிரைசோபிட் இரை விழுங்கிகள்

கிரைசோபிட்இரைவிழுங்கிகள் என்ற பூச்சிகள் வெள்ளை ஈக்களின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் எக்ேடருக்கு 1000 என்ற எண்ணிக்கையில் விடவும். கரும்பூஞ்சாணத்தை நிவர்த்தி செய்ய மைதா மாவு கரைசலை (ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் பசை) ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்கவும். அதிக அளவு பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கும் போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுகிறது. இதனால் பூச்சிக்கொல்லிகளை முற்றிலும் தவிர்த்து நன்மை செய்யும் பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.

பாதிப்பு மிக அதிகமாகவும், நன்மை செய்யும் பூச்சிகள் காணப்படாத தருணத்திலும் ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி வேப்ப எண்ணெய் அல்லது 5 மில்லி அசாடிராக்டின் என்ற மருந்தை 1மில்லி கொட்டும் திரவத்துடன் கலக்க வேண்டும். பின்னர் ராக்கர் ஸ்பிரேயர் அல்லது மோட்டார் மூலம் இயங்கும் ஸ்பிரேயர் கொண்டு இலைகளில் நன்கு நனையும்படி தெளிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கோபி வேளாண்மை உதவி இயக்குனர் முரளி தெரிவித்துள்ளார்.


Next Story