சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x

சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல அகண்டராவ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல அகண்டராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சம்பா சாகுபடி

நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் இலைச்சுருட்டு புழு, தண்டு துளைப்பான், புகையான் ஆகியவற்றின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது.

இலை சுருட்டு புழுக்கள் இலைகளை நீளவாக்கில் மடக்கி கொண்டு அவற்றில் உள்ள பச்சையத்தை சுரண்டி திண்பதால் இலைகள் வெள்ளையாக மாறிவிடும். இதன் தாக்குதல் அதிகமாகும்போது, நெல் வயல் முழுவதும் வெள்ளை நிறமாக மாறி காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

இலை சுருட்டு புழுக்கள்

இலை சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு பெவேரியா பேசியான 1 கிலோ அல்லது குளோரிபைரிபாஸ் 500 மி.லிட்டர் அல்லது தையோமீத்தாக்சம் 40 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 400 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

தண்டுத் துளைப்பான் தாக்குதலால் நெற்பயிரின் நடுக்குருத்து வாடி காய்ந்து விடும். கதிர் பிடிக்கும் தருணத்தில் இதன் தாக்குதல் தென்பட்டால் நெல் மணிகள் பால் பிடிக்காமல் வெண் கதிர்களாக மாறி மகசூல் பாதிக்கப்படும்.

தேவையான அளவு யூரியா

இதை கட்டுப்படுத்த நாற்றுகளை நெருக்கமாக நடுவதை தவிர்க்க வேண்டும். தேவையான அளவு யூரியாவை 3 அல்லது 4 முறை பிரித்து இட வேண்டும். இதன் தாக்குதல் பொருளாதார சேத நிலையை தாண்டும் போது, ஏக்கருக்கு அசாடிராக்டின் 400 மி.லிட்டர் அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 400 கிராம் மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

புகையான் தாக்குதல் காரணமாக, நெற்பயிர்கள் வட்ட வடிவில் திட்டுத் திட்டாக காய்ந்து தீய்ந்தது போல் காணப்படும். வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதும், தழைச்சத்து அதிகமாக இடப்பட்ட வயல்களிலும் இதன் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காலை, மாலையில் தெளிக்க வேண்டும்

இதை கட்டுப்படுத்த, யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை மேலுரமாக இடும்போது பிரித்து இட வேண்டும். இதன் தாக்குதல் அதிகமாகும்போது, ஏக்கருக்கு குளோரிபைரிபாஸ் 500 மி.லிட்டர் அல்லது தையோமீத்தாக்சம் 40 கிராம் மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story