நெற்பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள்


நெற்பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

துத்தநாக நுண்ணூட்டச்சத்து குறைப்பாட்டினால் நெற்பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர்(பொறுப்பு) ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்

நாகப்பட்டினம்

சிக்கல்:

துத்தநாக நுண்ணூட்டச்சத்து குறைப்பாட்டினால் நெற்பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர்(பொறுப்பு) ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரசாயன உரங்கள்

நெற்பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் தெளித்து வருகின்றனர்.ரசாயன உரங்களில் பேரூட்ட சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் நுண்ணூட்டச் சத்துக்களை அதிலும் குறிப்பாக துத்தநாக சத்தினை (ஜிங்க் சல்பேட்) பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை.நெற்பயிர் விளைச்சலில் துத்தநாகசத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும்.

துத்தநாக நுண்ணூட்டச்சத்து

ஒரே நிலத்தில் தொடர்ந்து நெற்பயிர் சாகுபடி செய்வதால், நிலத்தில் எப்போதும் நீர் தேங்கி, கரையா உப்புகள் அதிகளவு அதிகரித்து துத்தநாகச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மண்ணில் சுண்ணாம்பு தன்மை அதிகம் இருந்தால், துத்தநாக நுண்ணூட்டச்சத்து பயிருக்கு கிடைக்க இயலாத நிலை ஏற்படும்.

பயிருக்கு தேவையான அளவுக்கு அதிகமாக மணிச்சத்து மெக்னீசியம் சத்து மற்றும் இரும்புச்சத்து இடுவதால் அவை துத்தநாக சத்தின் செயல் திறனைக்குறைக்கிறது.

அறிகுறிகள்

நெற்பயிரில் துத்தநாகச்சத்து குறைபாடுகளை நடவு வயலில் நான்கு வாரத்துக்குள் காண முடியும். இளம் இலைகளின் நடுநரம்பு அடிப்புறத்தில் இருந்து வெளுத்துக் காணப்படும்.

மேல்புறம் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பழுப்படைந்து காய்ந்து விடும். பயிர்கள் சீராக வளராமல் திட்டுத் திட்டாக வளர்ச்சி குன்றி காணப்படும்.

நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்

வயலில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியிருப்பது நெற்பயிரில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதற்கான ஒரு முக்கியக் காரணமாகும்.

எனவே, காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வயலில் எப்போதும் தண்ணீர் தேங்காத வகையில், போதுமான ஈரப்பதம் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 10 கிலோ ஜிங்க் சல்பேட் நுண்ணூட்ட உரம் இடுதல் வேண்டும்.

மாற்றுப்பயிர்கள்

பசுந்தாள் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை அதிகளவில் வயலுக்கு இடவேண்டும். விவசாயிகள் தங்களது வயலில் நெற்பயிரையே தொடர்ந்து சாகுபடி செய்யாமல் பயறு வகைப் பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் போன்ற மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story