புதிதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை


புதிதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை
x

புதிதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

சென்னை,

மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி, 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த அவர், வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த பணியாளர்களிடம் சென்று, பயணிகளிடையே மெட்ரோ ரெயில் சேவையின் வரவேற்பு எப்படி உள்ளது. தினமும் இங்கிருந்து எவ்வளவு பேர் பயணம் செய்கின்றனர்? என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு சென்று, அங்கிருந்தபடியே வடபழனி பகுதியில் நடக்கும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளை பார்வையிட்டார்.

இதையடுத்து, அங்கிருந்து ஆலந்தூருக்கு மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டபடி, பயணிகளிடம் மெட்ரோ ரெயில் சேவையின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வுகளின்போது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்திக், திட்ட இயக்குனர் அர்ஜுனன், தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன், தொழில்பிரிவு மாநில செயலாளர் கே.முரளி, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய் சத்தியன், மாவட்ட துணைத்தலைவர் பிரேம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பரந்தூர் விமான நிலையம் இணைக்கப்படும்

மத்திய மந்திரி கிஷன் ரெட்டி ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, பல்வேறு இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சில நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் பரிசீலனையில் உள்ளது.

சென்னை மட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் அங்குள்ள முக்கிய ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளிடம் கேட்டுள்ளோம். அந்த வகையில், புதியதாக அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் சேவை இணைக்கப்படும்.

சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் மேம்பாடு குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நாளை (இன்று) ஆலோசனை நடத்த உள்ளேன். தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தி வருகிறோம். நாளுக்குள் நாள் புது ஆதரவு அதிகரித்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அதைத்தொடர்ந்து, வேளச்சேரியில் நடைபெற்ற தென்சென்னை நாடாளுமன்ற பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில், மாநில துணை தலைவர்கள் நாராயணன் திருப்பதி, டால்பின் ஸ்ரீதர், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத், அஸ்வத்தாமன், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், சோழிங்கநல்லூரில் மகளிர் சுயஉதவி குழு பெண்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, சிட்லபாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி சீதாராமன் இல்லத்திற்கு சென்று கேட்டறிந்தார். பின்னர், விருகம்பாக்கத்தில் சமூக ஊடகவியலாளர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

சென்னைக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, இன்று (புதன்கிழமை) தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வது, பா.ஜ.க. வட்டத் தலைவர்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.


Next Story