வார்டில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து காரசாரமாக விவாதம்
திருப்பூர் 3-ம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து காரசாரமாக விவாதம் செய்தனர்.
திருப்பூர் 3-ம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து காரசாரமாக விவாதம் செய்தனர்.
கவுன்சிலர்கள் கூட்டம்
திருப்பூர் 3-ம் மண்டலத்துக்கு உட்பட்ட 15 வார்டுகள் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு 3-ம் மண்டலத்தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். 3-ம் மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் வாசு குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் நடத்திய காரசார விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் சாமிநாதன்:- தண்ணீர் 9 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. குடிநீர் குழாய் மற்றும் தெருவிளக்கு பிரச்சினைக்கு உரிய முறையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததோடு உரிய முறையில் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
குப்பைத்தொட்டிகள் பற்றாக்குறை
கவுன்சிலர் தமிழ்செல்வி:- குப்பைத்தொட்டிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 15 துப்புரவு பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 4 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். குப்பைத் தொட்டிகள் இல்லாததால் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கவுன்சிலர் பெனாசிர்:- காங்கயம் பாளையம் ஆரம்பப் பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லாமல் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். தெருவிளக்கு மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாலை நடுவே கழிவுநீர் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் சாலையை தரமாக அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கவுன்சிலர் செந்தில்குமார்:- திருப்பூர் மாவட்டத்திற்கு வரக்கூடிய தண்ணீர் அளவு எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையை வைத்துக்கொண்டு அதிகாரிகளிடம் விவாதம் செய்வது சரியல்ல, முதலில் மேயர் மற்றும் அமைச்சர், மண்டல அதிகாரிகள் கலந்து ஆலோசித்து திருப்பூர் மாவட்டத்திற்கு மொத்த கொள்ளளவு தண்ணீர் எவ்வளவு தேவைப்படுகிறது, தற்போது தண்ணீர் வரத்து அளவு என்ன என்ற விவரத்தை அறிந்து கொண்டு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்கமுடியும்.
சாலைப்பணிகள் மந்தம்
கவுன்சிலர் விஜயலட்சுமி:- ராக்கியாபாளையம் பிரிவில் இருந்து நல்லூர் வரை சாலைவிரிவுபடுத்தும் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளது. சாலையை விரிவுபடுத்தும் பணி தற்போது வரை மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் செய்யப்பட்டது. வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்து கவுன்சிலருக்கு அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என்றும், குடிநீர் பற்றாக்குறை குறித்து உரிய முறையில் பதில் அளிப்பதில்லை என்றும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
மண்டலத் தலைவர் கோவிந்தசாமி:-திருப்பூர் 3-ம் மண்டல அலுவலர் உள்பட்ட 15 வார்டுகளுக்கு குடிநீர், தார்ச்சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் வசதிகள் ஆகிய பணிகளை மேற்கொள்ள உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகிற 26-ந் தேதி தெருவிளக்கு டெண்டர் விட உள்ளது எனவே விரைவில் தெருவிளக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். மேலும் குடிநீர் குழாய் உடைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு தரமான பைப்புகளை அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.