மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம்
மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை அவர் நட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் ஆணைய திட்ட அலுவலர் வீரபத்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பள்ளி குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்தில் மரங்கள் நடுவது குறித்து விழிப்புணர்வு கிராம இளைஞர்களுடன் எம்.எல்.ஏ. நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கிராமத்தில் மரங்கள் நடுவதற்கு அவர் ரூ.3 ஆயிரம் நன்கொடையை கிராம மக்களிடம் வழங்கினார். கிராமத்தில் அடிப்படை வசதிகள், மாசார்பட்டி - சங்கிலிப்பட்டி செல்லும் சாலையில் பொதுக் கழிப்பிடம் அமைத்து தண்ணீர் வசதி செய்து தரப்படும் என்று அவர் உறுதி அளித்தார் இதில் புதூர் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை, மரங்கள் மக்கள் நிர்வாக அதிகாரி ராகவன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மகேந்திரன், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஓட்டப்பிடாரம் யூனியன் துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் ரமேஷ் முன்னிலை வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 56 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு படிப்பு சம்பந்தமான கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. சார்பில் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர்கள் முத்துக்குமார், சண்முகையா, சரஸ்வதி, மாரியப்பன், லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளியில் 86 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ. வழங்கினார்.