மேட்டூர் கூட்டுக்குடிநீர் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு
திருப்பத்தூர் காந்திநகர் பகுதியில் மேட்டூர் கூட்டுக் குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் காந்திநகர் பகுதியில் மேட்டூர் கூட்டுக் குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
குடிநீர் குழாய் பதிப்பு
திருப்பத்தூர் நகராட்சி 29-வது வார்டு காந்திநகர் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் புதுப்பேட்டை ரோடு பகுதியில் இருந்து காந்திநகர் சிவசக்தி நகர் வழியாக புதுப்பேட்டைக்கு மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் அமல்படுத்த ராட்சத குழாய்கள் பதித்து வருகின்றனர். காந்திநகர் பகுதியில் நேற்று மாலை குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி கவுன்சிலர் சத்யா ராஜசேகர், பா.ம.க. நகர செயலாளர் டி.கே.முத்தமிழ் ஆகியோர் தலைமையில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட தார் சாலைகளில் காந்திநகர் 29- வது வார்டில் பல வருடங்கள் கழித்து தற்போது தான் நகராட்சி சார்பில் தார் ரோடு போடப்பட்டு உள்ளது. ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி புதுப்பேட்டை பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல காந்திநகர் பகுதியில் உள்ள தார் சாலைகள் தோண்டப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
இதனால் வீட்டில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகள் பழுதடைகிறது. எனவே இந்தப் பகுதியில் குடிநீர் குழாய்களை கொண்டு செல்லக்கூடாது. புதுப்பேட்டை ரோடு முத்துமாரியம்மன் கோவில் எதில் உள்ள சாலை வழியாக குழாய்களை கொண்டு செல்ல வேண்டும் என்ஹனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், போலீசார் உடனடியாக பணியை நிறுத்தி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.