காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை இன்று திறக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சேலம்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர், அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதியான இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்துவைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் செய்துள்ளனர்.
ஏற்பாடுகள் மும்முரம்
முதல்-அமைச்சர் மேட்டூர் அணையை திறக்க வருவதையொட்டி அணையின் வலதுகரையில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேல்மட்ட மதகின் மேல் பகுதியில் மின்விசை அமைக்கப்பட்டு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிற்பதற்காக தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.
பாதுகாப்பு
முதல்-அமைச்சர் வருகையையொட்டி அணையின் வலது கரை, இடது கரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் குழுவினர் அணையை முழுமையாக சோதனை நடத்தினர்.
இது மட்டுமின்றி முதல்-அமைச்சரின் பாதுகாப்பு படையினர் அணைக்கு நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து சென்றுள்ளனர். இதேபோன்று முதல்-அமைச்சர் தங்கும் விருந்தினர் மாளிகை வளாகத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியுள்ளார்கள்.
இதுதவிர அணைப்பகுதி மட்டும் அல்லாமல் நகர்ப்பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே கட்சி கொடிகளும் கட்டப்பட்டு மேட்டூர் நகரமும், அணைப்பகுதியும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
17.37 லட்சம் ஏக்கர்
குறித்த நேரத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசனத்தின் மூலம் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கும் பயன் அளிக்கிறது.
பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர், அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம், 7 கதவணை மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து இந்த நீர்மின் நிலையங்களில் மின்உற்பத்தியின் அளவும் மாறுபடும்.
90 ஆண்டுகால வரலாற்றில்...
இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்டவைகளை 4 ஆயிரத்து 773.13 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.90 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
அணையின் 90 ஆண்டுகால வரலாற்றில் முதன் முதலில் 1934-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன் மாதம் 12-ந் தேதி இதுவரை 18 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 12-ந் தேதிக்கு முன்பாக 11 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 19-வது முறையாக ஜூன் மாதம் 12-ந் தேதி இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர்மட்டம் 103.41 அடி
இதற்கிடையே மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 865 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 727 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் 103.48 அடியில் இருந்து 103.41 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மழை அளவு 17 மில்லி மீட்டராக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.