மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக முழு கொள்ளவை எட்டியது...!
மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது. காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்,
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளது. அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வலுத்துள்ளதால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9.30 மணியளவில் 35,000 கனஅடியாக உயர்ந்தது.
இதனால், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் எதிரொலியாக காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அதிகரித்துள்ளது. நேற்று காலை 20,626 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 33,420 கனஅடியானது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 8,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 900கனஅடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் நேற்று மாலை 119.74 அடியாக உயர்ந்தது. நள்ளிரவு நேரத்தில் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியதையடுத்து, உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மின்சார உற்பத்திக்காக 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் 2 மாதமாக முழு கொள்ளளவில் நீடித்த நீர்மட்டம் கடந்த மாதம் 23-ம் தேதி மாலை 119.95 அடியாக குறைந்தது. 19 நாட்களுக்கு பின்பு மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது சாதனையாக கருதப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.