போலீஸ் பாதுகாப்புடன் நடந்த மேட்டூர் நகராட்சி கூட்டம்


போலீஸ் பாதுகாப்புடன் நடந்த மேட்டூர் நகராட்சி கூட்டம்
x

மேட்டூர் நகராட்சி கூட்டம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

சேலம்

மேட்டூர்:

போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம்

மேட்டூர் நகராட்சி கூட்டம் கடந்த மாதம் 30-ந் தேதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கவுன்சிலர் வெங்கடாஜலத்தை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது.

இதைத்தொடர்ந்து அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று நகராட்சி கூட்டம் நடந்தது. இதில் மேட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் 2 போலீசார் நகராட்சி அலுவலக நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த மேட்டூர் நகராட்சி கூட்டத்திற்கு தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். ஆணையாளர் அண்ணாமலை, துணைத்தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் விவரம் வருமாறு:-

ரங்கசாமி (தி.மு.க.):- மேட்டூர் நகராட்சி குடிநீர் அபிவிருத்த திட்டப்பணிக்கு ரூ.14 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டது. இதை நகராட்சி பங்களிப்புடன் ரூ.46.45 கோடியாக திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவறான முடிவாகும். நகராட்சிக்கு போதுமான வருமானம் இல்லாத நிலையில் நகராட்சி பங்களிப்பாக எவ்வாறு ரூ.9 கோடியை செலுத்த முடியும்.

தலைவர் மகன் தலையீடா?

நகராட்சி தலைவர் சந்திரா:- குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக தான் திட்ட மதிப்பீட்டை அதிகரித்து குடிநீர் திட்டப்பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

(அப்போது பேசிய தி.மு.க. கவுன்சிலர்கள் இளங்கோ, ரங்கசாமி ஆகியோர் நகராட்சி தலைவரின் மகன் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக குற்றம் சாட்டினர். அதை தலைவர் மறுத்தார்)

வார்டு புறக்கணிப்பு

மாரியம்மாள்(விடுதலை சிறுத்தைகள் கட்சி):- 29-வது வார்டான எனது வார்டில் எந்த அடிப்படை பணிகளும் நடைபெறுவதில்லை. எனது வார்டை புறக்கணிப்பதாக கருதுகிறேன் எனது வார்டிற்கு இதுவரை நகராட்சி தலைவரோ, துணைத்தலைவரோ, ஆணையாளரோ யாரும் நேரில் வந்து பார்த்ததே இல்லை. இதுவரை நான் கொடுத்த எந்த மனுக்கள் மீதும் நடவடிக்கை இல்லை.

லாவண்யா (அ.தி.மு.க.):- எனது 5-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள மில் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை நீண்ட நாட்களாக இருக்கிறது. இதனை தீர்க்காவிட்டால் பொதுமக்கள் போராட்டம் நடத்த உள்ளார்கள்.

இளம்பருதி(தி.மு.க.):- எனது வாடில் 6 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இவை அனைத்தும் பழுதடைந்து பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

மேற்கண்டவாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் மரகத பூஞ்சோலை அமைப்பது என்பன உள்பட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுகவனம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story