மேட்டூர் உபரிநீர் திட்டத்தை அனைத்து ஏரிகளுக்கும் செயல்படுத்த வேண்டும்


மேட்டூர் உபரிநீர் திட்டத்தை அனைத்து ஏரிகளுக்கும் செயல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 12 April 2023 1:00 AM IST (Updated: 12 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

மேட்டூர் உபரிநீர் திட்டத்தை அனைத்து ஏரிகளுக்கும் செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊராட்சிக்குழு கூட்டம்

சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று பழைய நாட்டாண்மை கழக கட்டித்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் ரேவதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் சேகர் வரவேற்றார்.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பேசும் போது, 'மாவட்டத்தில் பழுதடைந்து காணப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்களை விரைவில் சீரமைக்க வேண்டும். கோடை காலம் என்பதால் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு வராமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதிகளில் விலங்களுக்கு தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை வசதி இல்லாத இடங்களில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும்' என்றனர்.

மேட்டூர் உபரிநீர் திட்டம்

இதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பேசும் போது, 'மேட்டூர் தாலுகா கோனூர் கிராமத்தில் வீரனூர் முதல் கூழையூர் வரை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 750 மீட்டர் வரை இணைப்பு தார்சாலை அமைத்தால் சுமார் 30 ஆயிரம் மக்கள் குறைந்த தூரத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று வரமுடியும். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்ந்து அவர், மேட்டூர் உபரிநீர் திட்டத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை வாசித்தார். இந்த தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


Next Story