எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் சிலம்பம் பயில்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி
எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் சிலம்பம் பயில்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிலம்பம் பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் சார்பில் கூடுதல் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த இந்த முகாமிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முகாமினை பெரம்பலூர் நகர்மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சங்கத்தின் செயலாளர் சதீஷ்குமார், துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மாவட்டத்தில் ஏற்கனவே சிலம்பம் பயிற்சி பெறும் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வேல்கம்பு, தொடுகம்பு, நடுகம்பு, ஒற்றை சுருள் வாள், இரட்டை சுருள் வாள், குத்து வரிசை ஆகிய பயிற்சிகளுக்கு கூடுதலாக பயிற்சி அளித்தனர். இதனை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கற்று கொண்டனர். இதேபோல் நாளை மறுநாளும் (புதன்கிழமை) பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் இதில் நன்கு கற்று கொள்ளும் 10 முதல் 14 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகள் வருகிற 9, 10, 11-ந்தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ள முதல்-அமைச்சர் கோப்பைக்கான சப்-ஜூனியர்களுக்கான சிலம்ப போட்டிகளில் பங்கேற்க அழைத்து செல்லப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.