திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நுண் உர மையம்; மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்
தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண் உர மையத்தை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை தமிழகம் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் குப்பைகள் பிரிக்கப்பட்டு கழிவுகளில் கலந்திருக்கும் காகிதம், பிளாஸ்டிக், பாட்டில், துணி, ரப்பர், உலோகங்கள் போன்றவை பிரித்து எடுக்கப்படுகிறது. இதன்பின்னர் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு இந்த திட்டம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும் பொதுமக்கள் குப்பைகளை பிரித்து கொடுக்காமலயே இருந்து வருகின்றனர். இதுகுறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செயல்பட்டுவரும் நுண் உர மையங்களை மாணவ, மாணவியர்கள் பார்வையிடும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். நுண் உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்ட மாணவ, மாணவியர்களிடம், அங்கிருந்த பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் கொடுப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து 21-வது வார்டு பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து கொடுக்க வசதியாக மேயர் ஜெகன் பெரியசாமி, பொதுமக்களுக்கு குப்பை தொட்டிகளை வழங்கினார்.
இதில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி உதவி ஆணையர்கள் தனசிங், சரவணன், நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜபாண்டி, கவுன்சிலர் ஜான்சிராணி, வட்ட செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.