பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிர் உரங்கள்
பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிர் உரங்கள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிர் உரங்கள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் கருணாகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நுண்ணுயிர் உரங்கள்
பயிர்களின் வளர்ச்சிக்கு நுண்ணுயிர் உரங்கள் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய உரங்களில் மிக முக்கியமான ஒன்று மெத்தைலோ பாக்டீரியம் எனும் பாக்டீரிய உரமாகும். இவை பயிர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கிறது. பயிர்களின் இலை மேற்பரப்புகளில் இவை பல்வேறு கார்பன் மூலங்களை வெளியிடுகின்றன.
இந்த உரம் விதை முளைப்பு மற்றும் நாற்று வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. தாவர வளர்ச்சியை அதிகரிக்கிறது. இலையின் ஒளி சேர்க்கை பரப்பளவு மற்றும் குளோரோபில் அளவை அதிகரிக்கிறது. குறுகிய காலத்தில் பூத்தல், காய் பிடித்தல், முதிர்ச்சி அடைவதை ஏற்படுத்துகிறது.
மகசூல்
பழ வகை பயிர்கள் என்றால் பழங்களின் தரம், நிறம் மற்றும் விதை எடையை மேம்படுத்துகிறது. 10 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்க உதவும் இந்த நுண்ணுயிர் உரம் வறட்சியை தணிக்க பயன்படுகிறது.
விதை நேர்த்திக்கு இந்த உரத்தை பயன்படுத்தலாம். இலை வழியாக காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்கலாம்.
அனைத்து பயிர்களுக்கும் இந்த உரத்தை பயன்படுத்த முடியும். பயிர் வளர்ச்சியின் முக்கியமான கட்டத்தில் அல்லது 30 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம். பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாண கொல்லியுடன் இந்த உரத்தை கலக்க வேண்டாம். தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உயிர் உர உற்பத்தி மையத்தில் இந்த உரம் கிடைக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.