பொதுமக்களை அச்சுறுத்தும் நள்ளிரவு நாயகர்கள்


பொதுமக்களை அச்சுறுத்தும் நள்ளிரவு நாயகர்கள்
x
தினத்தந்தி 6 Sept 2023 1:15 AM IST (Updated: 6 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வலம்வரும் மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்

வளரும் திண்டுக்கல்

தமிழகத்தில் வேகமாக வளரும் நகரங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். கல்வி, தொழில், போக்குவரத்து என பல துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதிலும் சாலை, ரெயில் ஆகிய இருவழி போக்குவரத்தில் தென்தமிழகத்தின் நுழைவுவாயிலாக திகழ்கிறது.

திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, கோவை, சேலம், சென்னை, பெங்களூரு என அனைத்து ஊர்களுக்கும் பஸ் வசதி இருக்கிறது. மேலும் ஒருசில ஊர்களுக்கு 24 மணி நேரமும் பஸ் சேவையும் உள்ளது. இதனால் திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் நள்ளிரவுக்கு பின்னரும் பயணிகள் இருப்பதை பார்க்கலாம்.

ரெயில் பயணிகள்

இதேபோல் திண்டுக்கல் வழியாக 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் செல்கின்றன. அதிலும் இரவு 11 மணிக்கு மேல் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ரெயில்கள் வருகின்றன. எனவே திண்டுக்கல் ரெயில் நிலையம் நள்ளிரவிலும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்.

இந்த ரெயில்களில் வருபவர்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கு, காமராஜர் பஸ் நிலையத்துக்கு தான் செல்ல வேண்டும். ரெயில் நிலையத்தில் இருந்து காமராஜர் பஸ் நிலையத்துக்கு சுமார் 2 கி.மீ. தூரம் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் நடந்தே செல்கின்றனர்.

மினி தூங்கா நகரம்

ஒருசில பயணிகள் நாகல்நகர், ஆர்.எஸ்.சாலை, திருவள்ளுவர் சாலை வழியாக பஸ் நிலையத்துக்கு செல்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் நாகல்நகர், மெங்கில்ஸ் சாலை, பெல்பெர்க் சாலை, ஸ்கீம் சாலை வழியாகவும், திருமலைசாமிபுரம், போடிநாயக்கன்பட்டி, மென்டோன்சா காலனி, ஆரோக்கியமாதா தெரு, ஏ.எம்.சி. சாலை வழியாகவும் பஸ் நிலையத்துக்கு செல்கின்றனர்.

அதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் வேலை செய்யும் மில்தொழிலாளர்கள் பலர் நள்ளிரவில் திண்டுக்கல்லுக்கு திரும்புகின்றனர். மேலும் திண்டுக்கல்லில் வேலை செய்பவர்களும் நள்ளிரவில் பஸ் நிலையம் சென்று ஊருக்கு செல்கின்றனர். இதனால் திண்டுக்கல் நகரில் 24 மணி நேரமும் மக்கள் நடமாடி கொண்டிருப்பதை பார்க்கலாம். அதன்மூலம் திண்டுக்கல் மினி தூங்கா நகரமாக திகழ்கிறது.

நள்ளிரவில் அச்சுறுத்தல்

இதற்கிடையே கடந்த சில நாட்களாக நள்ளிரவில் மர்ம நபர்கள் நகரில் வலம் வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் நாயகர்கள் பந்தாவாக சுற்றும் இவர்கள், தனியாக நடந்து செல்லும் நபர்களை நோட்டமிட்டு இருட்டான பகுதியில் வைத்து தாக்கி செல்போன், பணத்தை பறிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி கொண்டிருக்கிறது. இதனால் இரவில் வேலைமுடிந்து செல்பவர்கள், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே திண்டுக்கல்லில் மக்கள் பாதுகாப்பாக நடமாடும் வகையில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் நள்ளிரவில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசாரை நியமிக்க வேண்டும்.

அதன்படி நாகல்நகர் மேம்பாலம், ரவுண்டானா, மெங்கில்ஸ் சாலை-பெல்பெர்க் சாலை சந்திப்பு அல்லது பெல்பெர்க் சாலை-ஸ்கீம் சாலை சந்திப்பு, ஆர்.எஸ்.சாலை-திருவள்ளுவர் சாலை சந்திப்பு, ஏ.எம்.சி. சாலை -மெங்கில்ஸ் சாலை சந்திப்பு, சிலுவத்தூர் சாலை-ஜி.டி.என்.சாலை சந்திப்பு, ரவுண்டுரோடு உள்பட முக்கிய சந்திப்புகளில் இரவில் பாதுகாப்பு பணிக்கு போலீசாரை நிறுத்தினால் பெண்களும் நள்ளிரவில் தனியாக செல்லலாம். எனவே போலீஸ் பாதுகாப்பு, ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Related Tags :
Next Story