ஈரோட்டில் நள்ளிரவில் மழை: அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி


ஈரோட்டில் நள்ளிரவில் மழை: அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி
x

மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி

ஈரோடு

ஈரோட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மழை பெய்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், லேசாக காற்று வீசினாலே மின்சாரத்தை தடைசெய்து விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

நள்ளிரவில் மழை

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சாரல் மழை தொடங்கியது. ஈரோடு மாநகர் மட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. மழை காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது. பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை கால்வாய்களில் தண்ணீர் பெருகியது. சாக்கடை அடைப்புகளால் பல இடங்களிலும் கழிவுநீர் சாலைகளில் ஓடியது. பாதாள சாக்கடை குழாய்களுக்குள் மழை நீர் பெருகியதால் பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகளையும் தாண்டி கழிவுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறியது.

குண்டும் குழியுமான பல சாலைகள் சேறும் சகதியுமாக மாறின. பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் தண்ணீர் நிரம்பி ஓடியது. சூரம்பட்டி வலசு அணைக்கட்டில் தண்ணீர் தேங்கி பெருக்கெடுத்து சென்றது.

மின்சாரம் துண்டிப்பு

இவ்வாறு நேற்று முன்தினம் நள்ளிரவு மழை தொடங்கியதும் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நள்ளிரவு 11 மணி அளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக வரவே இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஈரோட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தாலும், வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. மழை பெய்கிற நேரத்தில் சற்று குளு குளு காற்று வீசினாலும், மழை நின்ற அடுத்த நொடியே வெப்பத்தின் தாக்கம் தொடங்கி விடுகிறது. இந்த நேரத்தில் மின் விசிறி ஓடினால் மட்டுமே வெப்பக்காற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும். தற்போது நடுத்தர குடும்பத்தினரே ஏ.சி. எந்திரம் பொருத்தி உள்ளனர்.

ஆனால், தற்போது கடந்த சில நாட்களாகவே முன் அறிவிப்பு இல்லாமல் மின்சார தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினமும் வழக்கம்போல அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஈரோடு மாநகரின் பெரும்பாலான பகுதிகளிலும் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர். மழை பெய்தாலும், மின்விசிறிகள் இயங்க முடியாததால் கொசுக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் புகார்

அதுமட்டுமின்றி நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாநகரின் பல பகுதிகளிலும் பராமரிப்பு பணிக்காக மின்தடை அமலில் இருந்தது. இதனால் யு.பி.எஸ். வைத்து இருந்த வீடுகளிலும் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டது. குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டனர். வெப்பக்காற்று, கொசுத்தொல்லையால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அழும் நிலை ஏற்பட்டது.

இதுபற்றி பொதுமக்கள் சிலர் கூறும்போது, ஈரோட்டில் சமீப காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்து வருகிறது. லேசாக மழை பெய்யும் அறிகுறி தென்பட்டாலோ அல்லது காற்று வீசினாலோ உடனடியாக மின்சாரம் தடை செய்யப்படுகிறது. காற்றின்போது மரக்கிளைகள் மின்கம்பியில் உரசி மின் தடை ஏற்படுவதை தடுக்க மின் இணைப்பை துண்டிப்பதாக மின்சார வாரியத்தினர் கூறுகிறார்கள். ஆனால், வாரத்தில் ஒரு முறை பராமரிப்பு பணிகள் என்ற பெயரிலும் மின்சாரத்தை தடை செய்கிறார்கள். அப்போது மின்சார கம்பிகளில் உரசி பாதிப்பு ஏற்படுத்தும் மரக்கிளைகளை வெட்டும் பணி நடப்பதாகவும் கூறுகிறார்கள். அப்படி பராமரிப்பு பணி செய்தால், மழை நேரத்திலும், காற்றின்போதும் மின் கம்பிகளில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், பொதுமக்களை சிரமப்படுத்தும் நோக்கத்தில் தொடர்ந்து மின்சார வாரியத்தினர் அறிவிக்கப்படாத மின்வெட்டை ஏற்படுத்துகிறார்கள். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் பாதிக்காத வகையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.

சென்னிமலை

சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் பரவலாக மழை பெய்து உள்ளது. இதன்காரணமாக சென்னிமலை பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. வழக்கமாக கோடை காலங்களில் கிணறுகளில் நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்று விடும். இந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததாலும், கடந்த மாதம் வரை கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் சென்றதாலும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்தது.

மேலும் வாய்க்கால் பாசனம் இல்லாத பகுதிகளில் வழக்கமாக கோடை காலங்களில் வறட்சி ஏற்பட்டு ஆங்காங்கே குடிநீருக்காக போராட்டங்கள் நடைெபறும். ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் சென்னிமலை அருகே உள்ள வறட்சியான பகுதிகளும் தற்போது செழிப்பாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னிமலை பகுதியில் உள்ள குளம், குட்டைகளும் நிரம்பி வருகிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'சமீபகாலமாக பெய்த மழையால் மானாவாரி நிலங்களில் புல் முளைத்து செழித்து காணப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு கால்நடைகளுக்கு தீவன பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை. குளம், குட்டைகளில் மழைநீர் தேங்குவதால் அதன் அருகிலுள்ள கிணறு போன்ற நீர் நிலைகளில் நீர் மட்டம் உயரும்,' என மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

பெருந்துறை

பெருந்துறையை அடுத்த திருவாச்சி பகுதியில், நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறவாளிக்காற்று காரணமாக இரவு 10 மணி அளவில் திருவாச்சி வாவிக்கடையில் இருந்து சின்னியம்பாளையம் செல்லும் ரோட்டில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று வேருடன் சாய்ந்து விழுந்தது. ரோட்டின் குறுக்கே விழுந்ததால் அந்த பகுதியில் நேற்றுக்காலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் திருவாச்சி ஊராட்சி தலைவர் சோளிபிரகாஷ் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த ரோட்டில் வாகன போக்குவரத்து தொடங்கியது.

மழை அளவு

நேற்று காலை பதிவான மழை விவரம் (மி.மீட்டர் அளவில்) வருமாறு:-

நம்பியூர் -61

பெருந்துறை-37

சென்னிமலை- 35

சத்தியமங்கலம்-16

மொடக்குறிச்சி- 11

கொடுமுடி-8.2

கொடிவேரி-8

கோபி-7.6

குண்டேரிபள்ளம்-6.4

கவுந்தப்பாடி-6.4

ஈரோடு-5

அம்மாபேட்டை -1.2

அதிக பட்சமாக நம்பியூரில் 61 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக அம்மாபேட்டையில் 1.2 மி.மீட்டரும் பதிவாகி உள்ளது. ஈரோட்டில் 5 மி.மீட்டர் மழை பதிவானது.


Next Story