சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
சென்னையில் நள்ளிரவில் போலீசாரை வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரு.வி.க.நகர்,
சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர் (வயது 49). இவர் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் போலீசார் கடந்த 20-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் அயனாவரம் பழைய போலீஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் ஒரே மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் சங்கர் மடக்கி பிடித்து விசாரிக்க முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரை பயங்கரமாக தாக்கினார்.
இதில் சங்கர் நிலை குலைந்தார். சக போலீசார் சங்கருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். காயம் அடைந்த சங்கர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
தனிப்படை போலீசார்
இதுகுறித்து அயனாவரம் போலீசார் கொலை முயற்சி உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேர் குறித்து விசாரித்து வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
எனவே அந்த 3 பேரையும் உடனடியாக கைது செய்யும்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபிநாத் ஆகியோர் மேற்பார்வையில் அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மீனா உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை இதற்காக களத்தில் இறக்கி விடப்பட்டனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரை இரும்பு கம்பியால் தாக்கியவர் ரவுடி சூர்யா என்பதும், அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் திருநின்றவூரைச் சேர்ந்த கவுதம் என்கிற மோகன் (20), பொன்னேரியை சேர்ந்த அஜித் (20) என்பதும் தெரியவந்தது.
தனிப்படை போலீசார் தப்பியோடிய 3 பேரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் கவுதம், அஜித் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர்.
ரவுடி சூர்யா கைது
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரை தாக்கிய ரவுடி சூர்யாவை தேடினார்கள். திருவள்ளூர் அருகே உள்ள பட்டறை கிராமத்தில் தனது சகோதரி வீட்டில் சூர்யா தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் ஏட்டு சரவணகுமார், போலீஸ்காரர் அமானுஜின் அடங்கிய போலீஸ் படையினர் சூர்யா தங்கி இருந்த அவரது சகோதரி வீட்டை சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் சூர்யா தப்பியோட முயற்சித்தார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் மீனா துணிச்சலாக அவரை மடக்கி பிடித்து கைது செய்தார்.
சிறுநீர் கழிக்க அனுமதி
பின்னர் சூர்யாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்னை அழைத்து வந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் அயனாவரம் நியூ ஆவடி சாலை ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வரும் போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சூர்யா கூறினார்.
அயனாவரம் போலீஸ்நிலையத்துக்கு சென்று சிறுநீர் கழித்துக்கொள்ளலாம் என்று சூர்யாவை போலீஸ் வாகனத்தில் இருந்து இறக்கி விட மறுத்தனர். உடனே அவர், போலீஸ் வாகனத்திலேயே சிறுநீர் கழித்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் வேறு வழி இல்லாமல் சூர்யாவை போலீஸ் வாகனத்தில் இருந்து கீழே இறக்கி சிறுநீர் கழிக்க அனுமதித்தனர்.
போலீசாருக்கு வெட்டு
சூர்யாவின் பின்னால் போலீஸ் ஏட்டு சரவணகுமார், போலீஸ்காரர் அமானுஜின் ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர். அப்பகுதியில் கரும்புச்சாறு கடை ஒன்று இருந்தது. அந்த கடையில் கத்தி ஒன்று காணப்பட்டது. திடீரென்று சூர்யா அந்த கத்தியை எடுத்து சுழற்றியபடி என்னை பிடிக்க முற்பட்டால் குத்தி விடுவேன் என்று மிரட்டி விட்டு தப்பி ஓடினார்.
ஆனால் போலீஸ்காரர் அமானுஜின் அவரை பிடிக்க முற்பட்டார். சூர்யா அவரை கத்தியால் வெட்டிவிட்டு ஓடினார். உடனே ஏட்டு சரவணகுமார் சூர்யாவை மடக்கினார். அப்போது அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
சுட்டு பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
இதை 10 அடி தூரத்தில் நின்று கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் மீனா பதற்றம் அடைந்தார். நிலைமை மோசமானதை கண்டு கன நேரத்தில் தனது கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு சூர்யாவை எச்சரித்தார்.
ஓடினால் சுட்டுவிடுவேன் என்று அதட்டினார். ஆனால் அவர் அதற்கு பயப்படாமல் ஓட்டம் பிடித்தார். இதனால் வேறு வழியில்லாமல் தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் மீனா தனது கைத்துப்பாக்கியால் தப்பியோடிய சூர்யாவின் கால்களை நோக்கி சுட்டார். பாய்ந்து சென்ற குண்டு அவரது இடது கால் முட்டியை துளைத்தது.
அவர் அலறியப்படி கீழே சாய்ந்தார். உடனே அவரை மடக்கி பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சூர்யா அனுமதிக்கப்பட்டார். அவர் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த ஏட்டு சரவணகுமாரும், போலீஸ்காரர் அமானுஜினும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
பயங்கர கொள்ளையன்
உதவி கமிஷனர் ஜவகர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
குண்டு காயத்துடன் உயிர் தப்பிய சூர்யா பயங்கர கொள்ளையன் ஆவார். இவர் மீது புளியந்தோப்பு, மாதவரம், வேப்பேரி, பெரியமேடு, அயனாவரம், கொடுங்கையூர், திரு.வி.க. நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, செல்போன் மற்றும் செயின் பறிப்பு என 14 வழக்குகள் உள்ளன.
செல்போன் மற்றும் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் போது சூர்யா பொதுமக்களை முதலில் அரிவாளால் வெட்டிவிட்டு தான் கொள்ளையில் ஈடுபடுவாராம். கொள்ளை வழக்கு தொடர்பாக அவரை பிடிக்க போன புளியந்தோப்பு போலீசார் மீது ஏற்கனவே சூர்யா தாக்குதல் நடத்தி உள்ளார். எனவே சூர்யா பயங்கர கொள்ளையனாக சித்தரிக்கப்பட்டு வடசென்னை பகுதியில் வலம் வந்தார்.
உயிருக்கு ஆபத்து இல்லை
சூர்யாவுக்கு 22 வயதாகிறது. இவருக்கு பெண்டு சூர்யா என்ற அடைமொழி பெயர் உண்டு. இவர், திரு.வி.க.நகர். 7-வது தெரு பள்ளம் என்ற பகுதியை சேர்ந்தவர். இவர் காதல் திருமணம் செய்துக் கொண்டார். 2 குழந்தைகள் உள்ளது. தற்போது சூர்யா அவரது மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
சூர்யாவுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குண்டு காயம் ஏற்பட்ட கால் முட்டியில் நேற்று டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
போலீஸ் பாதுகாப்போடு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்க்க யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
பட்டியலில் பெயர் இல்லை, ஆனால் ரவுடி
போலீஸ் துப்பாக்கிசூட்டில் காயம் அடைந்த கொள்ளையன் சூர்யா மீது 14 வழக்குகள் உள்ளன. அதில் பெரும்பாலான வழக்குகள் செல்போன், சங்கிலி பறிப்பு வழக்குகள்தான். இதனால் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இல்லை. ஆனால் இவரது கொடூரமான செயல்பாட்டை வைத்து போலீசார் இவரை ரவுடி என்றே அழைத்து வந்தனர்.
நேற்று முன்தினம் இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்தியில் ரவுடி சூர்யா சுடப்பட்டார் என்றே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
காலில் சுடும் கலாசாரத்தை கையில் எடுத்த போலீசார்
தமிழகத்தில் ரவுடிகளை என்கவுண்ட்டர் முறையில் போலீசார் சுட்டு கொல்வது வழக்கமான ஒன்றாக இருந்தது. தற்போது தமிழக போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு ரவுடிகளை காயப்படுத்தி வீழ்த்தும், புதிய கலாசாரத்தை கையில் எடுத்து உள்ளனர். இதனால் உயிரிழப்பு ஏற்படாது. அதே நேரத்தில் ரவுடிகள், கொள்ளையர்கள் மத்தியில் பெரும் பயத்தை உருவாக்கும். மேலும் ரவுடிகளை சுட்டு வீழ்த்தி கொன்றால் வழக்குகளை சந்திக்க வேண்டிய நிலை வரும். மாஜிஸ்திரேட்டு விசாரணை என பல சவால்களை போலீசார் சந்திக்க வேண்டி வரும். ஆனால் காலில் சுடும் கலாசாரத்தில் போலீசார் அதுபோன்ற சவால்களை சந்திக்க வேண்டிய நிலை இல்லை.
கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதியன்று, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் முதன்முதலாக ரவுடிகளை காலில் சுட்டு காயப்படுத்தும் கலாசாரத்தை கையில் எடுத்து பிள்ளையார் சுழி போட்டார். தாம்பரம் அருகேயுள்ள சோமங்கலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற சச்சின் என்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அவரது காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து கடந்த 14-ந்தேதியன்று, கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனும் காலில் சுடும் கலாசாரத்துக்கு சற்று வேகம் ஊட்டினார். பயங்கர ரவுடிகளான ஜோஸ்வா, கவுதம் ஆகியோரை மேட்டுப்பாளையம் அருகே கோவை போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு காயத்தை ஏற்படுத்தினார்கள். போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய அவர்கள் இருவரது காலிலும் சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் துப்பாக்கியால் சுட்டார்.
அடுத்து மூன்றாவதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவும், இதே காலில் சுடும் கலாசாரத்தை கையில் எடுத்தார். திருச்சியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய துரைசாமி, சோமசுந்தரம் என்ற ரவுடிகளின் காலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் மோகன் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 4-வதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும் நேற்று முன்தினம் இரவு இதே கலாசாரத்தை கையில் எடுத்துள்ளார். பயங்கர கொள்ளையன் சூர்யா என்பவரை அயனாவரம் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளனர். போலீசார் தாக்கிவிட்டு தப்பியோடிய அவரை பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீனா, துணிச்சலாக தனது கைத்துப்பாக்கியால் காலில் சுட்டுள்ளார். காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்த சூர்யா, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். இதுபோல் ரவுடிகள், கொள்ளையர்களை காலில் சுடும் கலாசாரம் தமிழக போலீஸ் முழுவதும் அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் என்பதில் ஐயமில்லை.