நள்ளிரவில் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து பணம்- செல்போன்கள் திருடிய வாலிபர் கைது


நள்ளிரவில் பரபரப்பு:  கோவிலுக்குள் புகுந்து பணம்- செல்போன்கள் திருடிய வாலிபர் கைது
x

நள்ளிரவில் பரபரப்பு

ஈரோடு

ஈரோட்டில் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து பணம் மற்றும் செல்போன்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆஞ்சநேயர் கோவில்

ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம்போல் இரவு பூஜைகளை முடித்து பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து நள்ளிரவு 2.30 மணி அளவில் கோவிலில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் இதுகுறித்து இரவு ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் ராஜா, முகமது, சக்தி, முருகன், சிவசக்தி ஆகியோர் கள்ளுக்கடை மேடு ஆஞ்சநேயர் கோவிலுக்கு விரைந்து சென்றனர்.

பணம் -செல்போன் திருட்டு

பின்னர் போலீசார் கோவிலுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது கோவில் அலுவலக அறைக்குள் மர்ம நபர் ஒருவர் பதுங்கி இருந்தார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். மேலும் அந்த நபர் கோவில் அலுவலக அறையில் உள்ள மேஜையில் இருந்த ரூ.20 ஆயிரத்து 240 மற்றும் 7 செல்போன்களை திருடி கையில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனால் போலீசார் அந்த நபரை சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்த தறிப்பட்டறை தொழிலாளி சுப்பிரமணி (வயசு 35) என்பது தெரியவந்தது.

வாலிபர் கைது

சுப்பிரமணிக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளதும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இவர் 2 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story