தஞ்சை கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு வழிபாடு
கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தஞ்சை கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஈஸ்டர் பண்டிகை
கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரித்த 3-ம் நாள் உயிர்த்தெழும் நிகழ்வை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தவக்காலத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 22-ந் தேதி சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொண்டனர். இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் கடும் விரதம் இருந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். நேற்று ஈஸ்டர் பண்டிகை நள்ளிரவு வழிபாடு உலகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
நள்ளிரவு வழிபாடு
தஞ்சை திரு இருதய பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை நள்ளிரவு வழிபாடு மறைமாவட்ட பரிபாலகரும், ஆயருமான (பொறுப்பு) சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பாஸ்கார் திருவிழிப்பு சடங்குகளான புதுநெருப்பு, புனித தீர்த்தம் புனிதம் செய்யும் சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆன்ட்ரூ செல்வகுமார், திருத்தொண்டர் அரவிந்த் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்தவுடன் வியாகுல அன்னை ஆலய முகப்பில் இயேசுவின் உயிர்த்த காட்சி நடைபெற்றது. தொடர்ந்து உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.
முடிவில் ஈஸ்டர் பாண்டிகை வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு பாஸ்கா மேடையில் இயேசுவின் பாடுகளை விளக்கும் பாஸ்கா வரலாற்று நாடகம் நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.