ராணுவ தளவாடங்கள் கண்காட்சி
சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தோ-திபேத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முகாமில் ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தோ-திபேத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முகாமில் ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
ராணுவ தளவாடங்கள்
75-வது இந்திய சுதந்திரதினத்தை அமுத பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று நாளை(12-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை மூன்று தினங்கள் இல்லங்கள் தோறும் தேசிய கொடியை ஏற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிவகங்கை அருகே இலுப்பைகுடியில் அமைந்துள்ள இந்தோ-திபேத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முகாமில் ராணுவ தளவாடங்களை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
இதில் இலுப்பக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி, திருமாஞ்சோலை, அரசனூர், இலுப்பக்குடி அரசு பள்ளிகள் மற்றும் பாண்டியன் சரஸ்வதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சாகச நிகழ்ச்சி
இந்தோ-திபேத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி டி.ஐ.ஜி. ஆக்சல் சா்மா முன்னிலையில் ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்களை மாணவர்கள் பார்வையிட்டனர். அவர்களுக்கு இங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும், எவ்வாறு ஆயுதங்களை கையாள்வது, இது மாதிரியான ஆயுதங்கள் எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கி கூறினர்.
இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் மலை ஏறுவது, மலையில் சிக்கியவரை மீட்டு வருவது போன்ற சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினார்கள். இதை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
நாட்டரசன் கோட்டை
இதேபோல் சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையில் உள்ள கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடியேற்றுவதற்காக சிவகங்கை ஒமேகா சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சார்பில் 400 தேசியக்கொடிகள் வழங்கப்பட்டன.
பள்ளி குழு உறுப்பினர் சுப்பிரமணியன், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், ஒமேகா சிஸ்டம் உரிமையாளர் கண்ணன் ஆகியோர் மாணவிகளுக்கு தேசியக்கொடிகளை வழங்கினார்கள். இதையொட்டி இந்தியா போன்று வரையப்பட்ட ஓவியத்தில் மாணவிகள் தேசியக்கொடியுடன் நின்றனர். முடிவில் தலைமை ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.