விவசாயி கொலை வழக்கில் பால் வியாபாரி கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
ஆத்தூர் அருகே விவசாயி கொலை வழக்கில் பால் வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆத்தூர்,
விவசாயி பிணம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோபாலபுரம் நடுவீதி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54), விவசாயி. இவருக்கு 2 மனைவிகள் இருந்தனர். இவர், கடந்த 6-ந் தேதி கருத்த ராஜாபாளையம் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடையின் அருகே மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதனிடையே, சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவுப்படி ஆத்தூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அழகுதுரை ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பால் வியாபாரி கைது
விசாரணையில், மல்லியக்கரை மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகனான பால் வியாபாரி பூவரசன் (21) என்பவர் சம்பவத்தன்று விவசாயி முருகேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பூவரசனை மல்லியக்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் விவசாயி முருகேசனை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசாரிடம் பூவரசன் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
நான் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களுக்கு சென்று பால் கறந்து விற்பனை செய்து வந்தேன். கருத்த ராஜாபாளையம் கிராமத்தில் குணசேகரன் என்பவரது விவசாய நிலத்திற்கு பால் கறக்க சென்றேன். அப்போது ரோட்டின் குறுக்கே மதுபோதையில் முருகேசன் படுத்திருந்தார். அவரை எழுந்து வழி விடுமாறு கூறினேன். ஆனால் அதற்கு அவர் ஆபாசமான வார்த்தைகளால் என்னை திட்டினார். மேலும் எனது தாயை பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் பேசினார். இதனால் நான் அவரை அடித்தேன்.
கல்லை பிடுங்கி குத்தினேன்
அதற்கு முருகேசன் கற்களை எடுத்துக்கொண்டு என்னை தாக்க முயன்றார். இதனால் ஆவேசம் அடைந்து கல்லை பிடுங்கி அவரது தலையில் மாறி மாறி குத்தினேன். இதில் காயம் அடைந்து கீழே விழுந்துவிட்டார். அதன்பிறகு நான் வீட்டுக்கு சென்று விட்டேன். அடுத்த நாள் காலையில் தான் அவர் இறந்தது எனக்கு தெரியவந்தது. ஆனால் உண்மை நிலவரம் தெரிந்து என்னை போலீசார் பிடித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.