ரூ.15¼ லட்சத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம்
ஆலம்பூண்டியில் ரூ.15¼ லட்சத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்
செஞ்சி
செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட ஆவின் தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், ஆவின் துணை தலைவர் இளம்வழுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலம்பூண்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் குண்டு ரெட்டியார் வரவேற்றார்.
விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். இதில் மேல்மலையனூர் ஒன்றியக்குழுதலைவர் கண்மணிநெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, ஒன்றிய கவுன்சிலர் கேமல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
தொடர்ந்து அனந்தபுரம் பேரூராட்சி சிற்றரசூர் கிராமத்தில் நடைபெற்ற கால்நடை சிகிச்சை முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி கூட்டுரோட்டில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் இனிப்பு அன்னதானமும் வழங்கப்பட்டன.