பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூட்டுறவு சங்க ஊழியர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 42). இவர் அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ராதா என்ற மனைவியும், சஞ்சய், சதீஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழப்பழுவூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி, அங்கு சுந்தர் குடும்பத்துடன் குடியேறினார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ராதா, தனது மகன்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அரியலூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற சுந்தர், மதியம் வீட்டிற்கு வந்தார். பின்னர் மாலையில் அவர் வேலைக்கு வராததால், கூட்டுறவு சங்க ஊழியர்களும், அவரது மனைவி ராதாவும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
தூக்கில் தொங்கினார்
இதனால் சந்தேகம் அடைந்த ராதா வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் சுந்தர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுந்தர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.