பால் உற்பத்தி பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும்- கலெக்டர் அருண்தம்புராஜ்
பால் உற்பத்தி பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும் என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
பால் உற்பத்தி பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும் என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
பால் உற்பத்தியாளர்கள்
நாகை மாவட்டம் தலைஞாயிறில் ஆதிதிராவிடர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலை வகித்து பால் கொள்முதலை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இதுவாகும். இந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆதிதிராவிடர் மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்குமான ஒரு நல்ல தொடக்கமாகும். கொங்கு மண்டலத்தில் வசிக்கும் மக்கள் விவசாயம் மட்டுமின்றி பால் உற்பத்தி மூலமாகவும், தங்களுடைய உழைப்பின் மூலம் கணிசமான வருவாயை பெருக்கி வருகின்றனர்.
பொருளாதார முன்னேற்றம்
அவர்களை போன்று நாகை மாவட்ட மக்களும் பால் உற்பத்தியில் முழு ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும். இது பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும். கடந்த மாதம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் பால் குளிரூட்டும் கருவி அமைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கும், பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் பால் உற்பத்தியை பெருக்குவதற்கான அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொண்டு பால் உற்பத்தியை பெருக்கி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில ஆத்மா திட்டக்குழு உறுப்பினர் மகாகுமார், ஒன்றியக் குழுத்தலைவர் தமிழரசி, பேரூராட்சி தலைவர் செந்தமிழ்ச்செல்வி, ஆவின் பொது மேலாளர் கரிஷெட்டி, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், தலைஞாயிறு ஆதிதிராவிடர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் மகாலெட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம், தாட்கோ மேலாளர் விஜயகுமார், கூட்டுறவு பால் சங்க செயலாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.